கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை


கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 July 2017 4:15 AM IST (Updated: 3 July 2017 11:06 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனத்தெரிகிறது.

இதனால் கன்னியாகுமரி நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பலமுறை அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று பெண்கள் காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

சிறைபிடிப்பு

போராட்டத்தில் கன்னியாகுமரி அலங்கார மாதா தெருமக்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

அப்போது அலுவலகத்தில் செயல் அலுவலர் இல்லாததால், சுகாதார அதிகாரி முருகன் அங்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரச பேச்சுக்கு அழைத்தார். அவரை சிறைபிடித்த பெண்கள் உயர் அதிகாரிகள் வந்து குடிநீர் பிரச்சினைக்கு உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

 இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரியை விடுவித்து, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story