வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கலெக்டரிடம் நரிக்குறவர்கள் மனு
வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் நரிக்குறவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
கோபி அருகே உள்ள கரட்டுப்பாளையம் சூரியக்காட்டுகாலனி பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் 25–க்கும் மேற்பட்டோர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
கரட்டுப்பாளையம் சூரியக்காட்டுகாலனி பகுதியில் நாங்கள் 19 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்போது நாங்கள் வசித்து வரும் இந்த இடத்தில் வேறு சமூகத்தினருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நாங்கள் தொடர்ந்து அந்த இடத்தில் வசிக்க ஏதுவாக எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.
சென்னிமலை அருகே உள்ள புங்கம்பாடி அரவிளக்குமேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–
எங்கள் பகுதியில் 500–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். கடும் வறட்சியின் காரணமாக எங்கள் ஊரில் உள்ள ஆழ்துளை கிணறு வறண்டு விட்டது. இதனால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த தங்கம்மாள் (வயது 70) என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘எனக்கு வயதாகிவிட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக குடும்பம் நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. தற்போது நான் தனியாக வசித்து வருகிறேன். எனவே எனது மகனிடம் இருந்து தங்குவதற்கு இடமும், என்னை பராமரித்து கொள்ள ஜீவனாம்சமும் பெற்று தரவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
ஈரோடு கோணவாய்க்கால் பழைய ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்த 25–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–
நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக ரெயில்வே புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்த்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகத்தினர் எங்களது குடிசையை இடித்து விட்டனர். எனவே நாங்கள் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். அதைத்தொடர்ந்து எங்களுக்கு பூந்துறை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் குடிசை அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே நாங்கள் அங்கு குடிசை அமைத்து வாழ வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்தனர். மொத்தம் 334 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி எஸ்.வி.குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி என்.ராமச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.