மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் சிறுக்களஞ்சி அரசு பள்ளி ஆசிரியரை பணியிட மாற்ற எதிர்ப்பு

சிறுக்களஞ்சி அரசு பள்ளி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சென்னிமலை,
சென்னிமலை குமரன் சதுக்கத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவர் மாணவர்களை அடித்ததாக பள்ளியை பெற்றோர்கள் கடந்த மாதம் முற்றுகையிட்டனர். இதையடுத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியையை சிறுக்களஞ்சி அரசு நடுநிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
அதற்கு பதிலாக அந்த பள்ளியில் பணியாற்றி வந்த மோகன்ராஜ் என்ற ஆசிரியர் சென்னிமலை குமரன்சதுக்கம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதற்கு சிறுக்களஞ்சி பள்ளி மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் மாணவ, மாணவிகள் 200–க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தார்கள். பின்னர் அவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து கொண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் 100–க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து குவிந்தனர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பெற்றோர்கள் கூறியதாவது:–
ஆசிரியர் மோகன்ராஜ் 2006–ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். மாணவ–மாணவிகள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார். ஏழை மாணவ–மாணவிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளார். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாளையம், இச்சிப்பாளையம், காளிவலசு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்களை இந்த பள்ளியில் சேர்த்துள்ளோம்.
மேலும் சென்னிமலை குமரன்சதுக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை மாணவ–மாணவிகளை அடித்ததாக பிரச்சினை எழுந்ததால் தான் இப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். எனவே அவரை இப்பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க மாட்டோம். ஆசிரியர் மோகன்ராஜ் தான் தொடர்ந்து இப்பள்ளியில் பணியாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணனிடம் போலீசார் செல்போனில் பேசினார்கள். பின்னர் அவர்கள் பெற்றோர்களிடம் கூறும்போது, ‘ஆசிரியர் மோகன்ராஜ் தொடர்ந்து சிறுக்களஞ்சி பள்ளியிலேயே பணியாற்றுவார் என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்’ என்று கூறினார்கள். அதை மாணவ–மாணவிகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மாணவ–மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு காலை 10.15 மணி அளவில் வகுப்புகளுக்கு சென்றனர்.






