தோட்டங்களில் பயங்கர தீ விபத்து தென்னை, பனை மரங்கள், வாழைகள் கருகின

முக்காணி அருகே தோட்டங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தென்னை, பனை மரங்கள், வாழைகள் கருகின.
ஆறுமுகநேரி,
முக்காணி– தூத்துக்குடி மெயின் ரோட்டில் ஊருக்கு கீழ்புறம் சாலையோரம் காட்டுப்பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று காய்ந்த புற்களின் வழியாக நாலாபுறமும் வேகமாக பரவியது. இதனால் அங்கிருந்த நூற்றுக்கணக்கான பனை மரங்களும் தீயில் கருகின.
இதேபோன்று முக்காணியை அடுத்த அகரம் விலக்கில் மேல்புறத்தில் இருந்து அகரம் ஊருக்கு செல்லும் வழியில் உள்ள வாழை தோட்டங்களிலும் மாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அந்த வாழைகள் அறுவடை முடிந்து காய்ந்த நிலையில் இருந்ததால் தீ மளமளவென்று வேகமாக பரவியது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும், சீமைக்கருவேல மரங்களும் தீயில் எரிந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி சாகுபுரம், பழையகாயல் ஜிர்கோனியம், தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஸ்பிக் ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி, இரவு 7 மணி அளவில் தீயை அணைத்தனர்.
அகரம் விலக்கில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள தோட்டங்களில் உள்ள கிணற்று தண்ணீரை தீயணைப்பு வாகனங்களில் உறிஞ்சி வந்து தொடர்ந்து தீயை அணைத்தனர். ஆனாலும் ஆங்காங்கே தீயின் கனலால் புகைந்து கொண்டே இருந்தது. அங்கு போதிய மின்விளக்குகள் இல்லாததால், இருளில் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் அங்கேயே தயார் நிலையில் இருந்தனர்.
தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதிகளை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.






