குடிநீர் வசதி கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
குடிநீர் வசதி கோரி கொங்கநாயக்கன்பாளையம் பகுதி பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். அப்போது பல்லடம் தாலுகா பொங்கலூர் ஒன்றியம் காட்டூர் கிராமம் கொங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து குடிநீர் வசதி கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
‘‘எங்கள் ஊரில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் 20 வருடமாக ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் பெற்று பயனடைந்து வந்தோம். தற்போது வறட்சியின் காரணமாக ஆழ்குழாய் கிணறு வற்றிப்போனது. இதனால் 200 குடும்பங்களும் குடிநீர் இன்றி தவிக்கிறோம். எனவே குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’
இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர்.
இதுபோல் நல்லூர் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் வந்தவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் ‘‘திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் நுகர்வோர் குறை தீர்க்கும் நீதிமன்றம் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர் நீதிமன்றம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) செயலாளர் கனகராஜ் தலைமையில் வந்தவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் ‘‘பல்லடம் தாலுகா வடுகபாளையம் கிராமத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு பூமிதான நிலத்தில் பட்டா வழங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அனைவரும் கைத்தறி தொழில் செய்துவருபவர்கள். அவர்களுக்கு, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட தேவையான நிதியை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தர வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
சிறுபூலுவப்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘நாங்கள் வசித்து வரும் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் வேலை நடக்கிறது. இதனால் எங்கள் வீடுகள் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு அருகில் வேறு குடியிருப்பு அமைத்து தர வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுந்தர பாண்டியன் தலைமையில் அந்த அமைப்பினர் கொடுத்த மனுவில் ‘‘திருப்பூரில் பாலித்தீன் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. நொய்யல் ஆறு உள்ளிட்ட ஆறுகள் பாலித்தீன் பைகள் கொட்டப்படும் இடமாக மாறிவிட்டது. மேலும், ஓட்டல்களில் உணவுகள் வாழை இலைக்கு பதிலாக பாலித்தீன் பைகளில் வழங்கப்படுகிறது. எனவே இதனை கண்காணித்து பாலித்தீன் பைகள் இல்லாத மாவட்டமாக திருப்பூரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பஸ் ஏற செல்லும் பயணிகளுக்கு கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. முன்னதாக பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை தடுக்க கோரியும், துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தியும் வாழை இலையில் உணவுகளை வழங்க கோரியும் அவர்கள் வாழை இலையுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.