பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

தாராபுரத்தில் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தாராபுரம்,
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தாராபுரம் பகுதியில் உள்ள 4 வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அமராவதி பாசன சங்க விவசாயிகள் பொதுப்பணித்துறை அமராவதி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–
அலங்கியம், தளவாய்பட்டிணம், கொளிஞ்சிவாடி மற்றும் தாராபுரம் ஆகிய 4 வாய்க்கால்களுக்கு நேரடியாக 7,500 ஏக்கர் பாசனமும், மறைமுகமாக 25 ஆயிரம் ஏக்கர் பாசனமும் உள்ளது. கடந்த ஆண்டு மழை பெய்யாததால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து போனது. இருப்பு இருந்த தண்ணீர், உடுமலை தாலுகாவில் உள்ள 8 வாய்க்கால்களுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம் போன்றவற்றை சாகுபடி செய்து, முழுமையாக மகசூல் பெற்றார்கள். இந்த பகுதியில் உள்ள 4 வாய்க்கால்களுக்கு கடைசி வரை தண்ணீர் கிடைக்கவில்லை.
இதுதவிர குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து ஆற்றில் 3 முறை தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போதும் இந்த 4 வாய்க்கால்களுக்கு தண்ணீர் தருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு தண்ணீர் வரவில்லை. இந்த பகுதியில் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமராவதி பழைய ஆயக்கட்டு விவசாயிகள், கிணற்றுத்தண்ணீரை நம்பி கரும்பு, மக்காச்சோளம், வெங்காயம் போன்றவற்றை சாகுபடி செய்தார்கள். மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு, இங்குள்ள கிணறுகள் வற்றிவிட்டது. பாதி விளைச்சலில் இருந்த பயிர்களும் கருகிவிட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த வாரம் பெய்த தென்மேற்கு பருவ மழையால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தற்போது அணையில் 44.85 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை குடிநீர் தேவைக்காக திறந்து விடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் போது 4 வாய்க்கால்களுக்கும் சுமார் 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இனியும் இந்த 4 வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் இருந்தால், வாய்க்கால்களுக்கு உட்பட்ட கிராமங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும். எனவே 4 வாய்க்கால்களுக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கேட்டு அமராவதி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்று கூறினார்கள்.
முற்றுகை குறித்து தகவல் அறிந்த கோட்ட செயற்பொறியாளர் தர்மலிங்கம், முற்றுகையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 4 வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து, உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது விவசாயிகள் 4 வாய்க்கால்களுக்கும் தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால், குடிநீருக்காக தண்ணீர் திறந்துவிடும் போது, விவசாயிகள் ஒன்றிணைந்து வாய்க்கால்களுக்கு தண்ணீரை திறந்து விட்டு விடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன் பிறகு முற்றுகையை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.






