கும்மிடிப்பூண்டி அருகே பெண்களின் போராட்டத்தால் மதுக்கடை மூடப்பட்டது


கும்மிடிப்பூண்டி அருகே பெண்களின் போராட்டத்தால் மதுக்கடை மூடப்பட்டது
x
தினத்தந்தி 4 July 2017 4:30 AM IST (Updated: 4 July 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அந்த மதுக்கடை மூடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த தேவம்பேடு கிராமத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பஜாரில் கடந்த 5 வருடங்களாக மதுக்கடை இயங்கி வருகிறது.

இந்தநிலையில், நேற்று காலையில் தேவம்பேடு கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுமார் 100 பேர் திடீரென இந்த மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடையின் முன்புறம் திறந்து கிடந்த கிரில் கேட்டுக்கு பூட்டு போட்டு போராட்டத்தை துவக்கிய பெண்கள், கடை வாசலில் அமர்ந்து கடையை அகற்ற கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து முன்னிலை வகித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமணி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் 2 மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இதனை ஏற்கவில்லை. உடனடியாக கடையை மூட வேண்டும் என அவர்கள் கோ‌ஷம் போட்டனர்.

அப்போது அவ்வழியே பள்ளிபாளையம் கிராமத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற அரசு பஸ்சை அவர்கள் சிறைபிடித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை கண்ட போலீசார், முன்அறிவிப்பு இன்றி பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபடுவது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் செயல் என அறிவுறுத்தினர்.

இதனையடுத்து சாலைமறியலை கைவிட்ட பெண்கள், அங்கேயே சமையல் செய்து சாப்பிடப்போவதாக அறிவித்து கியாஸ் அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொன்னேரி தாசில்தார் சுமதி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் டாஸ்மாக் துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து மேற்கண்ட மதுக்கடை நிரந்தரமாக மூடப்படுவதாக அவர் அறிவித்தார்.

போராட்டத்தின் மூலம் வெற்றி கண்ட பெண்கள் கை தட்டி ஆரவாரம் செய்தபடி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் தேவம்பேடு பகுதியில் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

1 More update

Next Story