சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு


சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு
x
தினத்தந்தி 4 July 2017 3:45 AM IST (Updated: 4 July 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

வாலாஜாபாத்,

வாலாஜாபாத்தை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள செல்லம்பட்டிடை கிராமத்தை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் எட்வர்டு ஜெயசீலன் (வயது 22). இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் மகன் கிரிஸ்பின் (19) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

மேலும், எட்வர்டு ஜெயசீலன் தனது பாட்டி வீட்டின் அருகே சிறியதாக ஒரு தொழிற்கூடம் அமைத்து இருந்தார். அங்கு அவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று நண்பர்கள் இருவரும் அந்த தொழிற்கூடத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் எட்வர்டு ஜெயசீலன், கிரிஸ்பின் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையா தலைமையிலான போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story