ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் மனு


ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 4 July 2017 4:30 AM IST (Updated: 4 July 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அளித்த மனுவில், இந்திரா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு பணிவாய்ப்பு மறுக்கப்படுவதை தடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளியை மணந்த மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்ட கலெக்டரின் மேற்பார்வையில் உள்ள எழுத்தர் பணியிடங்கள், அங்கன்வாடி பணியிடங்கள் போன்றவற்றில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்கள் ஊரில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்கும் விதமாக ஊரின் சுடுகாட்டு பகுதியை வேலியிட்டு பாதுகாக்க வேண்டும். மேலும் ஊரின் நடுவே உள்ள பழமை வாய்ந்த புளியமரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் அருகே குரும்பலூரை சேர்ந்த சலவை தொழிலாளர்கள் அளித்த மனுவில், நாங்கள் நிரந்தரமாக வசிப்பதற்கு எங்கள் பகுதியில் வீடு கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கரன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) செல்வராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
1 More update

Related Tags :
Next Story