ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி


ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி
x
தினத்தந்தி 4 July 2017 4:30 AM IST (Updated: 4 July 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்தினருடன் விவசாயி தீக்குளிக்க முயன்றார். இதனால் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தேவர் ஊத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டாயுதபாணி. விவசாயி. இவரது மனைவி முத்துவேடி. இவர்களுக்கு கிருபா என்ற மகளும், உத்தரமூர்த்தி என்ற மகனும் உள்ளனர். தண்டாயுதபாணிக்கு தர்மபுரி அடுத்த ஆட்டுக்காரம்பட்டியில் 4½ ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பக்கத்து நிலத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தண்டாயுதபாணி சுப்பிரமணியிடம் கேட்ட போது அடியாட்களை வைத்து மிரட்டுவதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் பல முறை புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த தண்டாயுதபாணி தனது குடும்பத்தினருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது தனக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காத தர்மபுரி டவுன் போலீசாரை கண்டித்தும், நிலத்தை மீட்டு தரக்கோரியும் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வதாக கூறி மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் மீது ஊற்றி விட்டு தானும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் தீக்குளிப்பதை தடுத்தனர். இருப்பினும் தண்டாயுதபாணி தீக்குளிக்க போராடினார்.

பின்னர் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதுதொடர்பாக தண்டாயுதபாணி நடந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரிடம் எடுத்து கூறி மனு கொடுத்தார். இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் விவசாயி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story