ஜி.எஸ்.டி.யை தவறாக பயன்படுத்துவதை கண்டறிய 5 பேர் உயர்மட்டகுழு நியமனம் எச்.ராஜா பேட்டி


ஜி.எஸ்.டி.யை தவறாக பயன்படுத்துவதை கண்டறிய 5 பேர் உயர்மட்டகுழு நியமனம் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 4 July 2017 4:30 AM IST (Updated: 4 July 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

உணவகம் மற்றும் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி.யை தவறாக பயன்படுத்துபவர்களை கண்டறிய 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக எச்.ராஜா தெரிவித்தார்.

சேலம்,

இந்தியாவில் 29 மாநிலம், 5 யூனியன் பிரதேசத்தை சேர்ந்த உறுப்பினர்கள், ஒரு மத்திய கவுன்சில் உறுப்பினர் ஆகியோர் 17 முறை கூட்டங்கள் நடத்தி ஒருமித்த கருத்துடன் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக வரியை செலுத்த முடியும். நாட்டில் வரி ஏய்ப்பு, கருப்பு பணம் மற்றும் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு ஜி.எஸ்.டி.யால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.


உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் சிலவற்றில் ஜி.எஸ்.டி.-யுடன் வாட் வரியையும் சேர்த்து பொதுமக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இப்படி, தவறாக பயன்படுத்துவதை கண்டறிந்து தடுக்க 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜி.எஸ்.டி. விதிப்பின் மூலம் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக சொல்வது வேடிக்கையாக உள்ளது. அனைத்து மாநில உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்ட பின்னரே ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக வேண்டும் என குரல் கொடுத்தவர் தம்பிதுரை. மறுநாள் வி.கே.சசிகலாவுக்குதான் முதல்-அமைச்சர் ஆகும் தகுதி உண்டு என்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார்.

இப்போது அவர், எடப்பாடி பழனிசாமி பக்கம் போவதா? அல்லது டி.டி.வி.தினகரன் பக்கம் போவதா? என்ற குழப்பத்தில் உள்ளார். எனவே, ஜி.எஸ்.டி. குறித்து தம்பிதுரை சொல்வதெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். நிதி அமைச்சரே ஏற்றுக்கொண்டு உள்ளார்.


தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா கட்சி பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி அமைப்பாளர் வெள்ளையன் மற்றும் முருகன், சுரேஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளை செய்தவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள். 4 ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்குகள் தொடர்பாக இன்னும் விசாரணையே தொடங்கப்பட வில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். எடப்பாடி பழனிசாமி நிர்வாகத்தை துணிச்சலோடு நடத்திட வேண்டும். தமிழ்நாடு தாலிபான் நாடாக மாறிவருகிறது. தமிழக காவல்துறையின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஜி.எஸ்.டி. பற்றி தினமும் ஒருவிதமாக பேசிவருகிறார். அவர் ஒருபோதும் தமிழக முதல்-அமைச்சர் ஆக முடியாது. அவரது கையில் ஆட்சி வந்தால், தமிழ்நாடு சுக்குநூறாகி விடும். நந்தவனத்தில் ஒரு ஆண்டி கதைதான்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத், கோட்ட பொறுப்பாளர் முருகேசன், இணை பொறுப்பாளர் அண்ணாதுரை, பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

1 More update

Related Tags :
Next Story