அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக 115 சினிமா தியேட்டர்கள் மூடல் ரூ.25 லட்சம் வருவாய் இழப்பு


அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக 115 சினிமா தியேட்டர்கள் மூடல் ரூ.25 லட்சம் வருவாய் இழப்பு
x
தினத்தந்தி 4 July 2017 4:45 AM IST (Updated: 4 July 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாநில அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக 115 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் ரூ.25 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

சேலம்,

கடந்த 1-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ‘ஜி.எஸ்.டி‘ என்னும் சரக்கு-சேவை வரி அமலுக்கு வந்தது. இந்த ஜி.எஸ்.டி.யில் பாதி வரி மாநில அரசுக்குரியது ஆகும். அதாவது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. என்று வைத்து கொண்டால் 9 சதவீதம் மாநில ஜி.எஸ்.டி. ஆகும்.

இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்களின் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் மட்டும் மாநில அரசு கடந்த 1-ந் தேதி முதல் ‘தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டம்-2017‘ என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின்கீழ் சினிமா தியேட்டர்களுக்கு 30 சதவீதம் தனியாக கேளிக்கை வரி விதித்தது. ஆக ஒரு சினிமா டிக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி.-கேளிக்கை வரி என 58 சதவீதம் தியேட்டர் உரிமையாளர்கள் வரியை செலுத்திட வேண்டும்.

தமிழக அரசின் இத்தகைய கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து நேற்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களை மூடுவது என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால், தியேட்டர்களில் காலை, பிற்பகல், மாலை, இரவு என 4 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் 40 தியேட்டர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 30 தியேட்டர்களும், தர்மபுரி மாவட்டத்தில் 18 தியேட்டர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 தியேட்டர்களும் மூடப்பட்டன. தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக நேற்று அனைத்து சினிமா தியேட்டர்களும் வெறிச்சோடின.

ஏற்கனவே, சினிமா தியேட்டர்கள் மூடப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் தியேட்டர் பக்கம் வரவில்லை. ஆனால், வெளியூரில் இருந்து வந்த சிலர் ஏமாற்றம் அடைந்தனர். சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதன் காரணமாக அங்கு பணியாற்றிய ஏராளமான ஊழியர்கள் வேலை இழந்து பாதிப்புக்குள்ளானார்கள்.

குறிப்பாக சேலத்தில் 5 தியேட்டர்கள் ஒரே இடத்தில் இயங்கும் ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டிபிளக்ஸ் தியேட்டர், கவுரி என்றழைக்கப்படும் கஸ்தூரி தியேட்டர் மற்றும் ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் இளங்கோவன் கூறியதாவது:-

சேலம், நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் மாநில அரசின் 30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 115 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு தினமும் நடக்கும் 4 காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், இந்த தியேட்டர்களில் வேலை பார்த்த 2,500 ஊழியர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 மாவட்டத்தையும் சேர்த்து நேற்று ஒருநாள் சினிமா காட்சிகள் டிக்கெட் மூலம் கிடைக்கும் ரூ.25 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. என்ற ஒரே வரிவிதிப்புக்கு பின்னர், தமிழக அரசு தனியாக கேளிக்கைவரி 30 சதவீதம் வசூலிப்பதை ஏற்க முடியாது. இதனால், தியேட்டர்களை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, தமிழக அரசு கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story