தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீரை உடனே நிறுத்த வேண்டும் குமாரசாமி வலியுறுத்தல்


தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீரை உடனே நிறுத்த வேண்டும் குமாரசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 July 2017 3:06 AM IST (Updated: 4 July 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டும் மழை பற்றாக்குறையாக பெய்யும் என்றும், எனவே தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் போராட்டம்

காவிரி ஆற்றில் உள்ள அணைகளுக்கு தற்போது தான் கொஞ்சம் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. அதற்குள்ளாகவே தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 3, 4 நாட்களுக்கு முன்பு கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இது இன்று (அதாவது நேற்று) 5 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது அவசியம் என்று கூறி இருக்கிறார். இந்த ஆண்டும் மழை பற்றாக்குறையாக பெய்யும், அதற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று நான் சட்டசபையில் பேசினேன். இன்னும் ஏரிகள் நிரம்பவில்லை. ஆழ்துளை கிணறுகளில் இன்னும் தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை.

உடனே நிறுத்த வேண்டும்

இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. காவிரி நீரை திறந்துவிட்டாலும், தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் வழக்குபோடும். அதனால் கர்நாடக விவசாயிகளின் நலன் கருதி, தற்போது அணைக்கு வரும் நீரை கொண்டு ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு நன்றாக மழை பெய்தால் தமிழகத்திற்கு திறந்துவிடுங்கள்.

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிட்டுள்ளதை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், விவசாயிகளுடன் சேர்ந்து எங்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். காவிரி நீர் கேட்டு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதற்கு முன்பு, காவிரி அணைகளில் உள்ள தண்ணீரை கொண்டு ஏரிகளை நிரப்ப வேண்டும்.

பிரச்சினைகள் தீர்க்கப்படும்

கர்நாடகத்தில் 224 தொகுதிகளிலும் வாரம் ஒரு முறை கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் அந்தந்த தொகுதிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அதுபற்றி மக்களிடையே எடுத்துக் கூறப்படும். ஜனதா தளம்(எஸ்) ஆட்சி அமைந்தால் அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று மக்களிடம் உறுதி கூறப்படும். இதன் மூலம் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தியாக தின மாநாட்டை உப்பள்ளியில் வருகிற 21-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். மாநில அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்த பிறகும், விவசாயிகள் தற்கொலை என்பது தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இந்த விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் வகையில் விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்த சில முக்கியமான தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார். 
1 More update

Next Story