பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்து 2 மர்ம ஆசாமிகள் கைவரிசை


பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்து 2 மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 5 July 2017 4:45 AM IST (Updated: 4 July 2017 10:52 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டியன். அந்த பகுதியில் உள்ள காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவிகா (வயது 45). இவர் நேற்று காலை 11 மணியளவில் குமாரபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் திடீரென தேவிகாவை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

அப்போது, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆசாமி தேவிகாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தார். உடனே, தேவிகா தங்க சங்கிலியின் ஒரு முனையை பிடித்து கொண்டு, ‘திருடன்... திருடன்...’ கூச்சலிட்டபடி அவர்களிடம் போராடினார். இந்த போராட்டத்தில், தங்க சங்கிலி அறுந்து, அதில் இருந்த தாலி சுட்டி தேவிகாவின் கையிலும், தங்க சங்கிலி, ஆசாமியின் கையிலும் சிக்கியது.

 பின்னர் 2 ஆசாமிகளும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

 தேவிகா கையில் சிக்கிய தாலி சுட்டி 1 பவுன் எடை கொண்டது.  மர்ம ஆசாமிகள் கையில் சிக்கிய தங்க சங்கிலி 6 பவுன் எடைகொண்டதாகும்.

இதுகுறித்து தேவிகா ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளையும் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story