தஞ்சையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மக்கள் நலப்பேரவை, ஊழல் எதிர்ப்பு இயக்கம், ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட மக்கள் நலப்பேரவை, ஊழல் எதிர்ப்பு இயக்கம், ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் நலப்பேரவை தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார்.
செய்தி தொடர்பாளர் ராம.சந்திரசேகரன், துணைத்தலைவர் பன்னீர்செல்வம், ஊழல் எதிர்ப்பு இயக்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், இணை செயலாளர் பழனியப்பன், ரெயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் அயனாபுரம் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ரெயில் உபயோகிப்பாளர் சங்க சட்ட ஆலோசகர் ஜீவக்குமார் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஸ்மார்ட் கார்டு உடனே வழங்க வேண்டும். தஞ்சை சுற்றுவட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவகல்லூரிக்கு இயக்கப்படும் பஸ்களை ராமநாதன் ரவுண்டானா வழியாக இயக்க வேண்டும். ஏரி, குளங்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் சுகாதார சீர்கேடு, குண்டும், குழியுமான சாலைகளை சீர் செய்ய வேண்டும். பெரியகோவில், பழைய பஸ்நிலையம் முன்பு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டும். செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். தஞ்சை– திருச்சி இரட்டை ரெயில்பாதை பணியை விரைவு படுத்த வேண்டும். பட்டுக்கோட்டை– தஞ்சை– அரியலூர் புதிய ரெயில்பாதை பணியை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.