சேஷாசலம் வனப்பகுதியில் போலீசார் மீது செம்மரக்கடத்தல் கும்பல் கற்களை வீசி தாக்குதல்


சேஷாசலம் வனப்பகுதியில் போலீசார் மீது செம்மரக்கடத்தல் கும்பல் கற்களை வீசி தாக்குதல்
x
தினத்தந்தி 5 July 2017 4:45 AM IST (Updated: 4 July 2017 11:47 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் போலீசார் மீது செம்மரக்கடத்தல் கும்பல் கற்களை எடுத்து வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். கும்பல் விட்டுச்சென்ற பால்வேன், செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பதி,

திருப்பதியை அடுத்த சத்தியநாராயணபுரம் பி.டி.காலனி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் 50 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டி ஒரு பால்வேனில் ஏற்றி கடத்த முயற்சி செய்வதாக, திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கும்பலை சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசார் மீது திடீரென கடத்தல் கும்பல் சரமாரியாக கற்களை எடுத்துவீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டு, சரண் அடையுமாறு எச்சரித்தனர். ஆனால், கடத்தல் கும்பல் சரண் அடையாமல் செம்மரங்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர், ஒருவர் கூட சிக்கவில்லை.

செம்மரக்கட்டைகள் பறிமுதல்

செம்மரக்கடத்தல் கும்பல் விட்டுச்சென்ற ஒரு பால்வேனில் போலீசார் சோதனைச் செய்தபோது, அதில் ஏற்றப்பட்டு இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 71 செம்மரக்கட்டைகளை, பால் வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் செம்மரங்களை வெட்ட பயன்படுத்தப்படும் பொருட்களான கோடரிகள், அரிவாள்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேஷாசலம் வனப்பகுதியில் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை பிடிக்க 100–க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கடத்தல் கும்பல் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் ஐ.ஜி.காந்தாராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story