விலை வீழ்ச்சியால் நிலைகுலைந்த நீலகிரி தேயிலை விவசாயம்


விலை வீழ்ச்சியால் நிலைகுலைந்த நீலகிரி தேயிலை விவசாயம்
x
தினத்தந்தி 5 July 2017 3:45 AM IST (Updated: 5 July 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

விலை வீழ்ச்சியால் நீலகிரி தேயிலை விவசாயம் நிலை குலைந்துள்ளது.

குன்னூர்,

மத்திய அரசின் வணிக மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேயிலை வாரியம் தேயிலை ஒரு பண பயிர் என்று சிறு விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சிறு விவசாயிகள் காய்கறி பயிர் சாகுபடியில் இருந்து தேயிலை விவசாயத்திற்கு மாறுவதற்கு ஆர்வம் காட்டினர்.தேயிலை வாரியம் தேயிலை தோட்டம் அமைக்க மானியம் வழங்கியது. தமிழக அரசும் தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் தேயிலைநாற்றுகள் மற்றும் நிழல் தரும் மரமான சில்வர் ஒக் மரக்கன்றுகளையும் மானிய விலையில் வழங்கியது. மேலும் தென்னிந்திய தோட்ட அதிபர் சங்கமான உபாசி நிறுவனம் தரமான குளோனல் நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கியது.

அந்த நேரத்தில் சிறு விவசாயிகள் உபாசி வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெற்று கொட்டை நாற்றுகளுக்கு பதிலாக மகசூல் அதிகம் தருகின்ற குளோனல் தேயிலை நாற்றுகளை நர்சரியில் உற்பத்தி செய்து உப தொழிலாக கொண்டு விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் 1996–ம் ஆண்டு தேயிலைக்கு விலை உயர ஆரம்பித்தது.

தென்னிந்தியாவில் சி.டி.சி ரக தேயிலை தூள் தரமாக உற்பத்தி செய்ததால் ரஷ்யா நாடு இந்த தேயிலை தூளை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டியது. தேயிலை தூள் விலை உயர்வால் விவசாயிகள் பறிக்கும் பச்சை தேயிலைக்கும் விலை கூடியது. ஒரு கிலோ பச்சை தேயிலை 20 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டது.

தேயிலை தூளின் தரம் நாட்கள் செல்ல செல்ல குறைவடைந்ததால் ரஷ்யா தேயிலை தூளை வாங்க மறுத்தது. மேலும் ரஷ்யாவில் உள் நாட்டு குழப்பம் ஏற்ப்பட்டதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. 2000–ம் ஆண்டில் பச்சை தேயிலை ஒரு கிலோ ரூ.4.50–க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விலை வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நீலகிரி மாவட்டமே ஸ்தம்பித்தது. அந்த ஆண்டில் நடைபெற இருந்த கோடை விழா ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு தேயிலை வாரியமும், உபாசி வேளாண்மை அறிவியல் மையமும் இணைந்து சிறு விவசாயிகள் தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை சம்பந்தப்பட்டவர்களுக்கு பயற்சி வழங்கியது. அந்த கால கட்டத்தில் மானியமும் மத்திய அரசால் வழங்கப்பட்டன. அந்த கால கட்டம் தொடங்கி இதுவரை தேயிலை விலையில் ஏற்றம் இறக்கம் ஏற்பட்டு வருகிறது. தற்போதுள்ள கூலி உயர்வு இடு பொருட்களின் விலை உயர்வு இவற்றால் சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேயிலைக்கு விலை கூடி இருந்தது. அந்த சமயத்தில் சாதாரண வகை பச்சை தேயிலைக்கு 19 ருபாய் வரை வழங்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு தற்போது 12 ருபாய் ஒரு கிலோ பச்சை தேயிலை என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேயிலை வாரியமும் இந்த விலையை உறுதி செய்துள்ளது. இந்த விலையினால் சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விரக்தி அடைந்த நிலையில் உள்ளனர் அவர்கள் விலையை அதிகரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளனர்.


Next Story