தொழில் முனைவோர்களாக இளைஞர்கள் மாறவேண்டும்
தொழில் முனைவோர்களாக இளைஞர்கள் மாறவேண்டும் விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
தேனி,
தேனி மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தகவல் பரப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் தேனியில் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:
படித்த இளைஞர்கள் வேலை தேடி காத்திருப்பதை விட பலருக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும். புதிய தொழில் தொடங்க தொழில் முனைவோர்களாக இளைஞர்கள் மாறவேண்டும். புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கவும், அவர்கள் தொழில் தொடங்க கடன் உதவி பெற்றுக்கொடுக்கவும், தொழிற்பயிற்சி அளிக்கவும் மாவட்ட தொழில் மையம் மூலம் பயனுள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதிய தொழில் முனைவோருக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.1 கோடி வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் 25 சதவீத மானியத்தில் அளிக்கப்படுகிறது. எனவே படித்த இளைஞர்கள் தொழில்கள் செய்து வாழ்வில் முன்னேறி, பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், கனரா வங்கி தேனி மண்டல உதவி பொது மேலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாச கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் மாவட்ட தொழில் மைய மேலாளர் கோமதி நாயகம் நன்றி கூறினார்.