என்.எல்.சி. சார்பில் மாவட்டம் முழுவதும் 19 ஏரிகளை தூர்வாரும் பணி


என்.எல்.சி. சார்பில் மாவட்டம் முழுவதும் 19 ஏரிகளை தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 5 July 2017 3:30 AM IST (Updated: 5 July 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி. சார்பில் மாவட்டம் முழுவதும் 19 ஏரிகளை தூர்வாரும் பணியை மனித வளத்துறை அதிகாரி தொடங்கி வைத்தார்.

நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகிறது. அதன்படி குறிஞ்சிப்பாடி, கடலூர், விருத்தாசலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள முக்கிய ஏரிகளை தூர்வாரக்கோரி அந்தந்த பகுதி மக்கள் அவர்களது சட்டமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டனர்.

இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் இந்த பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதன் படி, தற்போது தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி மாவட்டத்தில் பல ஏரிகள் தூர்வாருவதற்காக ஆய்வு செய்து, அதன்மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் ஏரிகளை தூர்வாரும் பணி நடைபெறுகிறது. அந்தவகையில் மேல்மாம்பட்டு ஏரி, சொரத்தூர், பேர்பெரியான்குப்பம், கீழக்குப்பம், மருங்கூர், குப்பநாதம் கிராம ஏரி, இருப்பு, முதனை பெரிய ஏரி, வீணங்கேணி, கோபாலபுரம் வானாத ஏரி, ஊ.அகரம் சக்கரைக்குளம் ஏரி, இருப்புக்குறிச்சி ஏரி, செங்கால் ஏரி வடக்கு சேப்ளாநத்தம், வரதராஜன் பேட்டை நீலம்கட்டிக்குளம், குறிஞ்சிப்பாடி ஆடுர்குப்பம் ஏரி, லட்சுமி நாராயணபுரம் ஏரி, வெங்கலத்து ஏரி, வடலூர் நகரம் சுண்டுக்குழி, காரப்பன் ஏரி ஆகிய 19 ஏரிகளில் தூர்வாரும் பணி நடைபெறு கிறது.

இப்பணியின் தொடக்க நிகழ்ச்சி மேல்பாம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் நடந்தது. என்.எல்.சி. இந்தியா மனிதவளத்துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி. இந்தியா நகர நிர்வாகத்துறை தலைமை பொது மேலாளர் எம்.கார்த்திகேயன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமை பொது மேலாளர் ஆர். மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் 19 ஏரிகள், கோவை மாவட்டத்தில் குறிச்சி ஏரி என்று மொத்தம் 20 ஏரிகள், என்.எல்.சி. இந்தியாவின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story