மத்திய அரசை கண்டித்து புதுவையில் 8–ந் தேதி முழு அடைப்பு போராட்டம்
மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் புதுவையில் 8–ந் தேதி முழு அடைப்பு போராட்டம்
புதுச்சேரி,
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, புதுவையில் வருகிற 8–ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும், மத்திய அரசின் பா.ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை கவர்னரும், மத்திய அரசும் இணைந்து தன்னிச்சையாக நியமித்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுச்சேரியில் பா.ஜனதா குறுக்கு வழியில் ஆள நினைக்கிறது. கவர்னர் கிரண்பெடி, பா.ஜனதாவின் உத்தரவுகளை நிறைவேற்றுபவராக இருந்து வருகிறார். எனவே கவர்னர் கிரண்பெடி உடனடியாக பதவியை ராஜினாமா செய்யவேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின பொதுச்செயலாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசை கண்டித்தும், புதுவை கவர்னர் கிரண்பெடியை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிற 8–ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.