பெங்களூருவில் இருந்து மும்பைக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 200 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

பெங்களூருவில் இருந்து மும்பைக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 200 நட்சத்திர அமைகள் பறிமுதல் செய்யப்பட்டன
மும்பை,
பெங்களூருவில் இருந்து மும்பைக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 200 நட்சத்திர அமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கடத்தி வந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அரியவகை ஆமைகள் கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு முகமை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் கல்யாண் ரெயில் நிலையத்திற்கு விரைந்தனர்.
பிற்பகல் 2 மணியளவில் ரெயில் கல்யாண் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து குறிப்பிட்ட பெட்டியில் ஏறி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
200 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்அப்போது அந்த பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த இரண்டு பேரின் பைகளை வாங்கி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பைகளில் அதிக எண்ணிக்கையிலான நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த ஆமைகளை பறிமுதல் செய்தனர்.
எண்ணி பார்த்த போது மொத்தம் 200 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இந்த ஆமைகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972–ன் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினம் ஆகும். எனவே அந்த ஆமைகளை கடத்தி வந்ததாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைப்புவிசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பாலேகாவ் டானாஹால்லே கிராமத்தை சேர்ந்த சாகிராம் (வயது45), விஜய் (25) என்பதும், இருவரும் தந்தை, மகன் என்பதும் தெரியவந்தது. நட்சத்திர ஆமைகளை கடத்தியதாக இதற்கு முன்னர் இருவரும் கர்நாடக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியந்தது.
பின்னர் இருவரும் கல்யாண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தந்தை, மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






