பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை அடித்து கொல்வது இந்துத்வா கொள்கைக்கு எதிரானது சிவசேனா சொல்கிறது


பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை அடித்து கொல்வது இந்துத்வா கொள்கைக்கு எதிரானது சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 5 July 2017 3:42 AM IST (Updated: 5 July 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

‘‘பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை அடித்து கொலை செய்வது இந்துத்வா கொள்கைக்கு எதிரானது’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

‘‘பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை அடித்து கொலை செய்வது இந்துத்வா கொள்கைக்கு எதிரானது’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:–

தேசிய கொள்கை

மாட்டிறைச்சி பிரச்சினை உணவு பழக்கவழக்கம், வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்தது. ஆகையால், இந்த பிரச்சினை மீது தேசிய அளவில் கொள்கை வகுக்க வேண்டும். நேற்று வரைக்கும் பசுக்களை பாதுகாப்பவர்கள் இந்துக்களாக இருந்தனர். இன்றைக்கு அவர்கள் கொலையாளிகளாக மாறிவிட்டனர்.

பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மக்களை கொலை செய்வதை ஏற்க முடியாது என்றும், சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொள்ள யாருக்கும் உரிமை கிடையாது என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மாட்டிறைச்சி விவகாரத்தில் அவரது இந்த நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.

மோடிக்கு நன்றி

பசு பாதுகாப்பு என்கிற பெயரில் பொதுமக்களை அடித்து கொல்வது இந்துத்வா கொள்கைகளுக்கு எதிரானது. இந்துத்வா கொள்கைகளை தெளிவாக விளக்கியதற்காக பிரதமருக்கு நன்றி. பதற்ற நிலையை தணிக்க மாட்டிறைச்சி விவகாரத்தில் பிரதமர் மோடி தேசிய அளவில் கொள்கை வகுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.

பாரதீய ஜனதா ஆளும் ஜார்க்கண்ட், அரியானா மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாட்டிறைச்சி பிரச்சினையில் சிலர் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் சமீப நாட்களாக அரங்கேறி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story