சாலை தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் ஊழியர் சாவு மனைவி படுகாயம்
சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
பூந்தமல்லி,
கொடுங்கையூர், அன்னை இந்திரா நகர், வ.உ.சி. நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). தியாகராயநகரில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பூங்கொடி (35).
இருவரும் நேற்று காலையில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர். அவர்கள் மதுரவாயல்-தாம்பரம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது சாலையின் ஒரு பகுதியில் பராமரிப்பு பணி நடந்து வந்ததால் பரணிபுத்தூரில் இருந்து கோவூர் வரை ஒரு வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும் வாகன ஓட்டிகளுக்காக ஆங்காங்கே பேரல்கள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சம்பவ இடத்திலேயே...
அப்போது லோகநாதன், பூங்கொடி சென்ற மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேரல் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டு லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த பூங்கொடியை அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story