மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு ‘இலவச சைக்கிள் சேவை திட்டம்’
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு ‘இலவச சைக்கிள் சேவை திட்டம்’ அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.
சென்னை,
மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள், ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று திரும்புவதற்காக இலவச சைக்கிள் சேவை திட்டத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடங்க திட்டமிட்டு உள்ளது.
அதன்படி முதல் கட்டமாக கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், பரங்கிமலை, ஷெனாய்நகர் மற்றும் நேரு பூங்கா ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் தலா 10 சைக்கிள்கள் வீதம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
தேவையை கருதி மேலும் சில ரெயில் நிலையங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. ரெயில் நிலையங்களுக்கு தேவைப்படும் சைக்கிள்களை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ‘ஆதி சைக்கிள் கிளப்’ வழங்குகிறது.
கொச்சியில்...
இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மாதம் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து பயணிகள் நலன் கருதி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளுக்கு சென்றுவிட்டு, மீண்டும் மெட்ரோ ரெயிலில் பயணிக்க வரும் பயணிகளுக்காக ‘இலவச சைக்கிள் சேவை’ தொடங்கப்பட்டது.
இதன் மூலம் பயணிகளின் பணம் மிச்சப்படுத்தப்படுவதுடன், சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அவர்கள் உடல் ஆரோக் கியத்தையும் பெற முடிகிறது.
இந்த இலவச சைக்கிள் சேவை திட்டம் அடுத்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது. முதல் கட்டமாக 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு தலா 10 சைக்கிள்கள் வீதம் 70 சைக்கிள்களை கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ‘ஆதி சைக்கிள் கிளப்’ உரிமையாளர் எம்.எஸ்.ஆதிரூப் வழங்க உள்ளார். இவர் நாடு முழுவதும் 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று சாதனை படைத்துள்ளார்.
எஸ்.எம்.எஸ்.
சைக்கிள் தேவைப்படும் மெட்ரோ ரெயில் பயணிகள், தங்களை பற்றிய தகவல்களை குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி அதன் மூலம் பதிவு செய்ய வேண்டும். அதனை பரிசீலித்துவிட்டு, பயணியின் செல்போனுக்கு பதில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். அதனை ரெயில் நிலையங்களில் உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தில் காண்பித்து சைக்கிள்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண் முறையாக விரைவில் அறிவிக்கப்படும்.
குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் சைக்கிள்களை எடுத்து செல் லும் பயணிகள் அதே ரெயில் நிலையத்தில்தான் சைக்கிள் களை ஒப்படைக்க வேண்டும் என்பதில்லை. பயணிகளுக்கு சைக்கிள் வழங்கும் 7 ரெயில் நிலையங்களில் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் சைக்கிள் களை ஒப்படைக்கலாம்.
சைக்கிள்களை எடுத்து செல்லும் பயணிகள் அதனை திரும்ப ஒப்படைக்காமல் ஏமாற்ற முடியாது. ஏனெனில் சைக்கிள் கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பும் பயணியின் அடையாள அட்டை நகல் மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு விடும். எனவே பயணிகள் சைக்கிளை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் பட்சத்தில் அவர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story