நூறுகோடி வருடங்களில் உலகம் எப்படி இருக்கும்?


நூறுகோடி வருடங்களில் உலகம் எப்படி இருக்கும்?
x
தினத்தந்தி 5 July 2017 3:44 PM IST (Updated: 5 July 2017 3:44 PM IST)
t-max-icont-min-icon

எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் எட்டிப்பார்த்துவிட்டு வர முடிந்தால் கூட நன்றாகத்தான் இருக்கும்.

 ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்தக் காலத்தில் கூட ‘நாளைக்கு என்ன நடக்கும்’ என்பதைக் கூட திட்டவட்டமாகக் கணித்துச் சொல்ல இங்கு யாரும் இல்லை என்பதே உண்மை. பரிணாமப் பயணத்தில் இதுவரை பல கோடி ஆண்டுகளில், பல்வேறு உயிரியல் மாற்றங்கள், பல்வேறு பருவநிலை மாற்றங்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களை மனிதன் உள்ளிட்ட பூமியிலுள்ள பல உயிர்கள் கடந்து வந்துள்ளன.

இன்னும் நூறு கோடி ஆண்டுகளுக்குப் பின் பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், உயிர்கள் எப்படி மாறும்? என்பதை எல்லாம் ஒரு விஞ்ஞானிகள் குழு கணித்துள்ளது. முக்கியமாக, நமது சூரிய மண்டலத்தில் உள்ள செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களை, நிலவுகளை மனிதர்கள் கைப்பற்றி இருப்பார்களா? என்பது குறித்தும் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த கணிப்பில், மனித குலத்துக்கான நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. முதலாவதாக, வருகிற கி.பி. 10 ஆயிரமாவது ஆண்டில், கடந்த கி.பி. இரண்டாயிரத்தில் உலகெங்கும் பரவி கிலியைப் பரப்பிய பிரபல Y2K கம்ப்பியூட்டர் பிரச்சினை, Y10K என்ற புதிய வடிவத்தில் தோன்றி உலக கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. அப்போது அது கம்ப்யூட்டர் காலமாக இருக்கும். அதுபோன்ற ஒரு காலத்தில் கம்ப்யூட்டரே செயலிழந்துவிட்டால், பிறகென்ன உலகமே செயலிழந்தது போலத்தான்.

கி.பி. 50 ஆயிரமாவது ஆண்டில் பூமியில் மற்றுமொரு பனிக்காலம் தோன்றி நயாகரா போன்ற பல நீர்வீழ்ச்சிகள் அழியும், பனிமலைகள் கரைந்து பனிக்கட்டி ஆறாகிவிடும். கி.பி. ஒரு லட்சமாவது ஆண்டில், ‘டெர்ரா பார்மிங்’ (ஒரு புதிய கிரகத்தை மனிதன் வாழத் தகுந்த இடமாக மாற்றுவது) மூலம் செவ்வாய் கிரகம் மனித வாழ்க்கைக்கு ஏற்றதாக மாற்றப்படும்.

கி.பி. 2½ லட்சம் ஆண்டில், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி கீழே உள்ள ஹவாயின் ‘லோஇஹி’ எனும் 5,800 கி.மீ. நீளம் கொண்ட எரிமலையானது வெடித்துச் சிதறி ஒரு புதிய தீவு உருவாகும்.

கி.பி. 5 லட்சம் ஆண்டில், சுமார் ஒரு கி.மீ நீளம் கொண்ட சிறுகோள் ஒன்று பூமியுடன் மோதி அழிவை ஏற்படுத்தும்.

கி.பி. 10 லட்சம் ஆண்டில், பூமியில் ஒரு சூப்பர் எரிமலை வெடித்து சுமார் 3,200 கி.மீ பரப்பளவை மூடும் அளவு சாம்பல் வெளியேறி ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பர். மேலும், ஓரியான் நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள சிவப்பு நட்சத்திரம் பீட்டில்கூஸ்
(Bete-lgeuse)
ஒரு சூப்பர் நோவாவாக வெடித்துச்சிதறும்.
கி.பி. 20 லட்சம் ஆண்டில், மனித இனம் பல்வேறு கிரகங்களில் குடியேறி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் போகும். மேலும் புதிய பல மனித இனங்களும் தோன்றிவிடும்.

கி.பி. 50 லட்சம் ஆண்டில், போபோஸ்
(Phobos)
எனப்படும் செவ்வாய் கிரகத்தின் நிலவுகளுள் ஒன்று செவ்வாய் கிரகத்துடன் மோதி வெடித்துச் சிதறும். கீழே பூமியில், ஆப்பிரிக்காவில் ஒரு பெரும்பகுதி உடைந்து மத்திய தரை கடலை முழுவதுமாக மூடும். அதன் விளைவாக இமயமலைக்கு நிகரான ஒரு மலை ஒன்று உருவாகி எவரெஸ்ட் சிகரத்தைவிட பெரிய சிகரம் ஒன்று தோன்றும்.
கி.பி. 250 லட்சம் ஆண்டில், உலக கண்டங்கள் அனைத்தும் ஒன்றாகி ‘பேன்ஜியா அல்டிமா’ (Pangea Ultima) எனப்படும் ஒரு சூப்பர் கண்டம் உருவாகும்.

கி.பி. 500 லட்சம் ஆண்டில், பூமியில் இருந்து சுமார் 6500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு பெரு வெடிப்பு ஏற்படும். அதனால் பூமியில் ஓசோன் படலம் அழிந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அழிவு ஏற்படும்.

கி.பி. 800 லட்சம் ஆண்டில், பூமியின் பிராண வாயு, ஓசோன் மற்றும் கரியமில வாயு முற்றிலும் குறைந்து ஒளிச்சேர்க்கை நிகழாமல் மொத்த தாவர-விலங்கினங்கள் அனைத்தும் அழியும்.

இறுதியாக, கி.பி. ஆயிரம் லட்சம் ஆண்டில் சூரியனின் வெப்பம் 10 சதவீதம் அதிகரித்து பூமியின் தண்ணீர் மொத்தமும் காணாமல் போகும்.

இந்த கணிப்பில் குறிப்பிடப்படும் பல தகவல்கள் அனைத்தும் உண்மையா என்பதை நிரூபிக்க அல்லது உறுதியாகச் சொல்ல ஒரு வழியும் இல்லை. இருந்தபோதும், இதுவரையிலான உலக வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையில் நோக்கினால் இந்த கணிப்பில் கூறப்பட்டுள்ள பல நிகழ்வுகள் சாத்தியமே என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

Next Story