திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 6 July 2017 2:15 AM IST (Updated: 5 July 2017 6:19 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பயன்பாட்டு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணைக்கட்டு,

பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பயன்பாட்டு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகொண்டா பேரூராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற உத்திர ரங்கநாதர் கோவில், சார்பதிவாளர் அலுவலகம், 2 மேல்நிலைப் பள்ளிகள், 14 திருமண மண்டபங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை உள்ளன. பேரூராட்சி சார்பில் துப்புரவு பணியை மேற்கொள்ள 22 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இருப்பினும் சாலையோரம் மற்றும் வீதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்திருக்கிறது.

இந்த நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவைகளை பிரித்து எடுக்க ரூ.40 லட்சத்தில் திடக்கழிவு மேலான்மை திட்டத்தின் கீழ் கிடங்கு கட்டப்பட்டது.

2015–16–ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கிடங்கு இதுவரையில் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகளை நீர்வரத்து கால்வாய்களிலும், இறைச்சி வியாபாரிகள் கோழி கழிவுகளை தேசிய நெடுஞ்சாலை அருகேயும் கொட்டி வருவதால் அதிக துர்நாற்றம் வீசுகிறது.

அது மட்டுமல்லாமல் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டிவிடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பள்ளிகொண்டா பேரூராட்சியில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சுகாதார சீர்கேடு குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பள்ளிகொண்டா பகுதியில் உள்ள பொதுமக்கள் சுகாதாரமாக வாழ ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பைகளை கொட்ட வேண்டும் என்றும் சுகாதார சீர்க்கேட்டை விளைவிக்கும் கடை உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story