பவானி பகுதியில் 3 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு மர்ம காய்ச்சல்
பவானி பகுதியில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறினார்கள்.
பவானி,
பவானி நகராட்சி பகுதிக்கு உள்பட்ட 14–வது வார்டான சிவஞானசந்து, பழனி ஆண்டவர் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் காவிரி ஆற்றுநீர் குழாய் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அப்போது அந்தப்பகுதி பெண்கள் குடங்களில் தண்ணீர் பிடித்தனர். அந்த தண்ணீருடன் புழுக்களும் கலந்து வந்தது. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘பவானி பகுதியில் வினியோகிக்கப்பட்டு வரும் குடிநீர் தினமும் மாசு அடைந்து வருகிறது. அதனால் நாங்கள் குடிநீர் பிடிக்கும் போது வெள்ளை நிற துணியை குழாயில் கட்டிதான் பிடிக்கிறோம். மேலும் நேற்று வினியோகிக்கப்பட்ட குடிநீரில் அதிகஅளவில் புழுக்கள் வந்தது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். நகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பவானி பகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
மேலும் பவானி நகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற நீரை பருகியதால் பொதுமக்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பவானி பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 27), கண்ணன் என்பவருடைய மகள் ஹர்சிதா (3), யுவராஜ் என்பவருடைய மகள் தன்சிகா (2), மாரிமுத்து என்பவருடைய 9 மாத குழந்தை தன்சிகா ஸ்ரீ உள்பட 10 பேர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு உள்ளனர். அவர்கள் பவானி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.