பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்க கோரிக்கை

பாம்பன் ரெயில் பாலத்தை பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு கப்பல்கள் சென்று வரவும், வர்த்தக நோக்கத்திற்காகவும் கடந்த 1854–ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பாம்பனில் 80 அடி அகலத்தில், 14 அடி ஆழத்தில், சுமார் 300 அடி நீளத்தில் கால்வாய் தோண்டப் பட்டது.
அப்போது பாம்பன் கடல் பகுதியில் கப்பலும், ரெயிலும் செல்லும் வகையில் ரெயில்வே பாலம் ஒன்றை அமைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். அதன்படி பாம்பனில் புதிய ரெயில்பாலம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 1902–வது வருடம் தொடங்கப்பட்டது.
கடலுக்குள் 146 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது 145 இரும்பு கர்டர்கள் வைக்கப்பட்டு அதன் மீது தண்டவாளங்கள் போடப் பட்டன. பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி 11 வருடங்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடலில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் பணிகள் 1913–ம் ஆண்டு முழுமை யாக முடிவடைந்தது.
ஜெர்மனியை சோந்த பொறியாளர் ஷெர்ஷர் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ரெயில், கப்பல் செல்லும் வகையில் பாலத்தின் மைய பகுதியில் கடலுக்குள் பெரிய தூண்களை அமைத்து திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் அமைத்தனர். இதனால் இந்த தூக்குப்பாலம் ஷெர்சர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பாம்பன் ரெயில் பாலத்தின் வழியாக 1914–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரெயில், கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
இந்த பாலத்தில் மீட்டர்கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 2007–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பாம்பன் தூக்குப் பாலத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கிய நாளில் இருந்து இதுவரைதுறைமுக அதிகாரிகளின் அனுமதியுடன் ஆயிரக்கணக்கான கப்பல்கள் கடந்து சென்றுள்ளதுடன் பல கோடி ரூபாய் வருவாயும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.
ராமேசுவரத்துக்கும், ராமேசுவரம் கோவிலுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் ஒரு பாலமாக இருந்து நூற்றாண்டுகளை கடந்து இந்திய வரலாற்றுச் சின்னமாகவும், பொக்கிஷமாகவும் முத்திரை பதித்து கடல் மீது அமைந்துள்ள பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ரோடு பாலத்தில் நின்ற படியும் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இந்தியாவிலேயே கடலில் அமைந்துள்ள மிக நீளமான முதல் பாலம் என்ற சிறப்பு பெற்ற, 100 ஆண்டுகளுக்குமுன் மனித சக்தியை அதிகஅளவில் கொண்டு கட்டப்பட்டு இன்றும் உறுதித்தன்மையுடன் ரெயில் தூக்குப்பாலம் சேவைபுரிவது மிகப்பெரிய சாதனை ஆகும். எனவே பாம்பன் ரெயில் தூக்குபாலத்தை பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் யுனெஸ்கோவிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், இதை பாரம்பரிய நினைவு சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் பாரம்பரிய நினைவுச் சின்ன பட்டியலில் இடம் பெறும் பட்சத்தில் அது தென்னக ரெயில்வேக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து பாம்பன் ரெயில் பாலத்தை காணவரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






