இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கு மற்றும் சிவகங்கை பகுதிகளில் பிரசார இயக்கம் நடைபெற்றது.
காரைக்குடி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மதச்சார்பற்ற கொள்கையை பாதுகாக்க வேண்டும், இந்தி, சமஸ்கிருத திணிப்புகளை கைவிடக் கோருதல், வணிகமய கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்க வேண்டும், விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தென்னக நதிகளை இணைத்திட வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.400 சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது.
இந்த பிரசார இயக்கம் நேற்று காரைக்குடி வந்தது. பிரசார இயக்கத்தினருக்கு காரைக்குடி நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஐந்து விளக்கு அருகே வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கருப்பையா தலைமை தாங்கினார். சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, தேசியக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான அப்பாத்துரை, மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பிரசார இயக்கம் சிவகங்கை வந்தடைந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பழனிசாமி தலைமையில் வந்த பிரசார குழுவினருக்கு சிவகங்கை நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சிவகங்கை அரண்மனை வாசலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மேலும் கூட்டத்தில் மாவட்ட நிர்வாக குழுவை சேர்ந்த விஸ்வநாதன், கங்கை சேகரன், மருது சகாயம், கண்ணன், வக்கீல் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.