இந்திய அறிவியல் கழகத்தில் பட்டமளிப்பு விழா பிரணாப் முகர்ஜி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்


இந்திய அறிவியல் கழகத்தில் பட்டமளிப்பு விழா பிரணாப் முகர்ஜி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்
x
தினத்தந்தி 6 July 2017 3:30 AM IST (Updated: 6 July 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

இந்திய அறிவியல் கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பெங்களூரு,

இந்திய அறிவியல் கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் பேசிய சித்தராமையா, நாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக கூறினார்.

பட்டமளிப்பு விழா

இந்திய அறிவியல் பல்கலைக்கழகம் பெங்களூரு சி.வி.ராமன் ரோட்டில் உள்ளது. அந்த கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொணடு மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:–

நமது கல்வி முறை நல்ல ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் நல்ல ஆசிரியர் யார் என்று நாம் முதலில் கேட்க வேண்டும். மனதில் நினைக்கக்கூடிய தகவல்களை முழுமையாக மாணவர்களுக்கு கூறுபவர் நல்ல ஆசிரியரா? என்றால் இல்லை. ஆசிரியருக்கும், கணினிக்கும் வேறுபாடு இருக்கக்கூடாது. அத்தகையவர் நல்ல ஆசிரியர்.

ஒட்டுமொத்தமான மாற்றம்

நல்ல ஆசிரியர் என்பவர் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பான முறையில் வடிவமைப்பவர். வெறும் ஞானத்தை மட்டும் சொல்லி கொடுப்பவர் நல்ல ஆசிரியராக இருக்க முடியாது. எவ்வாறு சிந்தித்து செயல்படுவது என்பதை ஆசிரியர் சிறந்த முறையில் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

அப்போது தான் இந்த சமுதாயத்தில் ஒட்டுமொத்தமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இது நமக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது. ஆனால் நல்ல ஆசிரியராக இருப்பது என்பது சாதாரண வி‌ஷயம் அல்ல. நல்ல ஆசிரியர் என்பவர் மாணவர்களால் ஈர்க்கப்படுபவராக, அன்பு காட்டுபவராக, அக்கறையுடன் செயல்படுபவராக இருக்க வேண்டும். அத்துடன் மிகுந்த பொறுமை, தைரியம், நேர்மை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

உரிய மரியாதை கிடைக்கவில்லை

ஆசிரியர் பணி மிகவும் முக்கியமான பணி ஆகும். ஆனால் அதற்கேற்ப அந்த பணிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. ஆசிரியர்–மாணவர் உறவை அதிக அர்த்தமுள்ளதாக மாற்ற கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும். நல்ல ஆசிரியர்களை நாம் இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இத்தகையவர்கள் வேறு துறைக்கு செல்வதை தடுக்க வேண்டும். இது ஒரு சவாலான சிந்தனை ஆகும்.

இன்று(அதாவது, நேற்று) பட்டம் பெற்றுள்ள மாணவர்களான நீங்கள் இங்கு கடந்த சில ஆண்டுகளாக படித்து அறிவியல், பொறியியலில் திறமையை வளர்த்து கொண்டு இருக்கிறீர்கள். தற்போது நீங்கள் இந்த கல்லூரியை விட்டு பறந்து செல்லும் வண்ண பறவைகளாக உள்ளீர்கள். நீங்கள பல சாதனைகளை படைக்க நான் வாழ்த்துகிறேன்.

பல்வேறு சவால்கள்

உள்ளூர் அளவிலும், உலக அளவிலும் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். வறுமை, காலநிலை மாற்றம், நோய்கள் போன்றவற்றுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. இந்த போரில் நீங்கள் வீரர்களாக முன்னால் நிற்க வேண்டும். இவற்றுக்கு தீர்வு காண்பதில் அறிவியலின் பங்கு முக்கியமானது. அதே நேரத்தில் அறிவியல் ஒன்றால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

நீங்கள் அறிவியல் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என்பதை தாண்டி செயல்பட வேண்டியது அவசியம். நீங்கள் மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த கல்லூரியை விட்டு வெளியே செல்லும் நீங்கள் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. நீங்கள் மனிதாபிமான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணித்தால் உங்களின் எதிர்காலம் அர்த்தமுள்ளதாகவும், வண்ணமயமானதாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story