போராட்டத்தில் கைதான 10 பேரை விடுதலை செய்யாவிட்டால் ஆதார், வாக்காளர் அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம்


போராட்டத்தில் கைதான 10 பேரை விடுதலை செய்யாவிட்டால் ஆதார், வாக்காளர் அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம்
x
தினத்தந்தி 6 July 2017 4:30 AM IST (Updated: 6 July 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டுள்ள 10 பேரை விடுதலை செய்யாவிட்டால் ஆதார், வாக்காளர் அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் என்று கிராமமக்கள் தெரிவித்தனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த 30-ந்தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.


கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை நிரந்தரமாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடியதால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று 5-வது நாளாக கதிராமங்கலத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், கதிராமங்கலத்தை சேர்ந்த வேன் - கார் -ஆட்டோ டிரைவர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அனைத்து வாகனங்களையும் இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை கதிராமங்கலத்திற்கு வந்த தாசில்தார் கணேஷ்வரன், வர்த்தகர்களை கடைகளை திறக்கும்படி கூறினார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், கதிராமங்கலம் மக்களுக்காக போராடிய 10 பேரையும் விடுதலை செய்யும் வரை கடையடைப்பு போராட்டம் தொடரும் என தாசில்தாரிடம் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து கதிராமங்கலம் மாரியம்மன்கோவில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கிராமமக்கள் கலந்துகொண்டனர். இதில் கடந்த 30-ந்தேதி போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 பேரை நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யாவிட்டால் ஆதார், வாக்காளர் அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைப்போம் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையான பிறகே மாவட்ட கலெக்டரை கதிராமங்கலத்தில் சந்தித்து பேசுவோம் என்றும் கிராமமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஓ.என்.ஜி.சி. செயல்இயக்குனர் குல்பிசிங் உள்ளிட்ட அதிகாரிகள் கசிவு ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story