மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த சூளைமேனி கீழ் கருமனூர் கிராமத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
நாங்கள் மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மதுக்கடை அமைப்பதற்காக பணிகள் தொடக்கப்பட்டது. இதை அறிந்த நாங்கள் ஒன்று திரண்டு கடந்த 11–4–2017 அன்று அந்த கட்டிடத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தோம். இதைத்தொடர்ந்து அந்த பணி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அங்கு மதுக்கடை கட்டுவதற்காக கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.
அந்த இடம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் ஆகும். அங்கு மதுக்கடை திறந்தால் பொதுமக்கள், இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் இன்னலுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் அமைய உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கே.முத்துவிடம் அளித்தனர். மனுவை பெற்றுகொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.