கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் தமிழகம் வரவில்லை


கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் தமிழகம் வரவில்லை
x
தினத்தந்தி 6 July 2017 4:30 AM IST (Updated: 6 July 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் தமிழகம் வந்து சேராததால் ஒகேனக்கல் அருவிகள் தண்ணீரின்றி பாறைகளாக காட்சி அளிக்கிறது.

பென்னாகரம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2,365 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 1,000 கனஅடி தண்ணீரும் கடந்த 30-ந்தேதி திறக்கப்பட்டதாக கூறப்பட்டது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகபட்சமாக 70 மணி நேரத்தில் பிலிகுண்டுலு வந்தடைவது வழக்கம். ஆனால் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாக தெரிவித்து 6 நாட்கள் ஆகியும் நேற்று மாலை வரை அந்த தண்ணீர் பிலிகுண்டுலுவிற்கு வந்து சேரவில்லை.

கர்நாடகாவில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய பணிகளுக்காக தண்ணீர் பாய்ந்து மீதமுள்ள தண்ணீரே தமிழகத்திற்கு வரும். கர்நாடக அரசு தெரிவித்தபடி குறிப்பிட்ட அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதா? அல்லது அதை விட குறைவான தண்ணீர் திறக்கப்பட்டதா? என்ற கேள்வி தமிழக விவசாயிகளிடையே தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில் பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவு குறித்து மத்திய நீர்பாசனத்துறையினர் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் வினாடிக்கு 120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீரின் அளவு நேற்று 100 கனஅடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் தண்ணீரின்றி பாறைகளாக காட்சி அளிப்பது இன்னும் தொடர்கிறது.

தமிழக விவசாயிகள் சங்க மாநில மாநாடு தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வந்தனர். இந்த மாநாட்டில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒகேனக்கல் வழியாக வந்த விவசாயிகளில் சிலர் திடீரென ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். திடீரென நடந்த இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அங்கிருந்து தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றனர். 

Related Tags :
Next Story