புதுவையில் ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது
மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியதுபோல் புதுவையில் ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது நாராயணசாமி பேட்டி
புதுச்சேரி,
புதுச்சேரியில் மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கையில் சென்டாக் மூலம் முறைகேடு நடந்ததாக மேனன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையின் ஒரு பகுதியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு சரியாக நடந்துள்ளது எனக்கூறி மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
இதன் மூலம் சென்டாக் விவகாரத்தில் அரசின் மீது தவறு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்த பிரச்சினையை காரணம் காட்டி அரசின் மீது களங்கம் கற்பிக்க கவர்னர் கிரண்பெடி முயற்சி செய்தார். அவருடைய நடவடிக்கையால் மாணவ–மாணவிகள் சேர முடியாமல் 45 இடங்கள் காலியாக உள்ளன. தவறான குற்றச்சாட்டுகளை கூறி மாநில அரசு மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கவர்னரும், கவர்னர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான விவகாரத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசின் பரிந்துரையின்படி தான் நியமிக்க வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடாகும். ஆனால் கவர்னர் நேர்மாறாக செயல்படுகிறார். புதுவை கவர்னர் மாளிகை, பா.ஜ.க.வின் அலுவலகமாக செயல்படுகிறது.
நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில், அரசு விதிகளின்படி செயல்படுவோம். இந்த பிரச்சினையை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுக்கும், கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கும் கட்டுப்படுவோம். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைமை, ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க உள்ளேன்.
அருணாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.க.வின் செயல்பாட்டை மக்கள் எப்போதும் மறந்து விட மாட்டார்கள். அதுபோல் புதுவையிலும் பா.ஜ.க.வினர் தங்களது எண்ணத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறாது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற பா.ஜ.க.வின் பகல் கனவு பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.