மக்காத குப்பைகளை பிரித்து வழங்கிய முதியவருக்கு தங்க நாணயம் பரிசு மாநகராட்சி ஆணையர் வழங்கினார்


மக்காத குப்பைகளை பிரித்து வழங்கிய முதியவருக்கு தங்க நாணயம் பரிசு மாநகராட்சி ஆணையர் வழங்கினார்
x
தினத்தந்தி 6 July 2017 4:15 AM IST (Updated: 6 July 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

மக்காத குப்பைகளை பிரித்து வழங்கிய முதியவருக்கு தங்க நாணயம் பரிசினை திருச்சி மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

திருச்சி,

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சியை குப்பை இல்லாத நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 5–ந்தேதி முதல் மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் புதன் கிழமை தோறும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் போன்ற மக்காத குப்பைகளை பிரித்து தனியாக வாங்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பைகள் வீடுகளில் தினந்தோறும் சேகரிக்கப்பட்டு வருகிறது. மக்காத குப்பைகளை முறையாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கும் பொதுமக்களை ஊக்கப்படுத்துவதற்காக தங்க நாணயம் பரிசு திட்டத்தையும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பின்படி மக்காத குப்பைகளை மாநகராட்சி பணியாளரிடம் வழங்கும் பொதுமக்கள் அதனை தங்களது செல்போனில் படம் பிடித்து ‘வாட்ஸ் அப்’ மூலம் 84894 44400 என்ற எண்ணுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிக்குள் மட்டும் அனுப்ப வேண்டும். இப்படி அனுப்பப்படும் படங்கள் அனைத்தும் கணினி மூலம் குலுக்கல் நடத்தப்பட்டு அதிர்ஷ்ட சாலி நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நேற்று அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி 12வது வார்டு வள்ளுவர் நகரை சேர்ந்த செல்வமணி (வயது65) என்பவருக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று தங்க நாணயம் பரிசு வழங்கினார்.

திருச்சி மாநகராட்சியின் 4 இடங்களில் நுண்ணுரம் செயலாக்க மைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி, காஞ்சீபுரம், பண்ருட்டி, கடலூர், தாம்பரம், பல்லாவரம், மறைமலை நகர் நகராட்சிகளில் இருந்து வந்திருந்த சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று திருச்சியில் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள். தங்களது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.


Next Story