6. தற்காப்புக்காக செய்வது கொலையாகுமா?


6. தற்காப்புக்காக செய்வது கொலையாகுமா?
x
தினத்தந்தி 7 July 2017 9:30 AM IST (Updated: 6 July 2017 6:31 PM IST)
t-max-icont-min-icon

நான் 2011–12–ம் ஆண்டுகளில் மதுரை மாநகர காவல் ஆணைய ராகப் பணியாற்றி வந்தேன்.

நான் 2011–12–ம் ஆண்டுகளில் மதுரை மாநகர காவல் ஆணைய ராகப் பணியாற்றி வந்தேன். அப்பொழுது மதுரை புறநகர் பகுதியில் வித்தியாசமான குற்றச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அந்த சம்பவம் குறித்து சமயமுத்து என்பவர், ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மூத்த மகன் வீரணன் என்ற ஜோதிபாசுவை, தனது மருமகளும், வீரணனின் மனைவியுமான உஷாராணி அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், அந்தக் கொலைக்கு உஷாராணியின் அப்பா, தம்பி மற்றும் ஒருவர் துணை புரிந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட ஊமச்சிக்குளம் போலீசார், உஷாராணி உள்பட 4 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பிறகு, இறந்து போன வீரணனின் பிரேதத்தைக் கைப்பற்றி, புலன் விசாரணையைத் தொடங்கினர்.

இதுபோன்ற வழக்குகளில், பிரேதத்தின் மீது காணப்படும் காயங்கள் பற்றிய விவரங்களை, புலனாய்வு செய்யும் அதிகாரி குறிப்பெடுத்துக் கொள்வார். பின்னர் ஐந்து பஞ்சாயத்தார்கள் முன்னிலையில், இறப்பிற்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை மேற்கொள்வார். இதனை ‘பிரேத விசாரணை’ என்று கூறுவார்கள். அதன்பிறகு, பிரேதத்தைப் பரிசோதனை செய்ய, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படும். பிரேத விசாரணை முடிந்த 24 மணி நேரத்திற்குள், அந்த அறிக்கை, சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வீரணனின் பிரேத விசாரணையை தொடங் குவதற்கு முன்பாக, புகார் கொடுத்த சமயமுத்துவிடம் புலனாய்வு செய்யும் அதிகாரி மீண்டும் ஒரு முறை விசாரணை மேற்கொண்டார்.

காவல்நிலையத்தில் தான் கொடுத்த எழுத்துப் பூர்வமான புகாரைத் தழுவியே, சமயமுத்துவின் வாக்குமூலமும் இருந்தது.

இறந்து போன வீரணன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உஷா ராணியைத் திருமணம் செய்ததாகவும், 6 ஆண்டு கள் ஒற்றுமையாக குடும்பம் நடத்திய அவர் களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருப்பதாகவும் சமயமுத்து கூறினார். காலப்போக்கில் உஷாராணி வேறு ஒரு வருடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு, தன் மகனைத் தீர்த்துக் கட்ட செய்த முயற்சியில், தன் மகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், பிரேத விசாரணையின் பொழுது பஞ்சாயத்தார் மற்றும் வீரணனின் குழந்தைகள் கொடுத்த வாக்குமூலங்கள், சமயமுத்து கொடுத்த கொலை குற்றப் புகாரில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

சம்பவத்தன்று பிற்பகலில் வீரணன் குடிபோதையில் வீட்டிற்கு வந்து, தன் மனைவியிடம் கட்டாய உடலுறவு கொள்ள முயற்சித்துள்ளான். அந்த முயற்சி தோல்வியடையவே, கல்லூரியில் படித்து வரும் தன் மகள் அன்றைய தினம் வீட்டில் இருந்ததால், அவளிடம் தன் காம வேட்கையைக் காட்ட முயன்றுள்ளான். மகளைக் காப்பாற்ற, வீட்டிலிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து, கணவனின் தலையில் உஷாராணி அடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த வீரணனுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் வீரணன் இறந்துவிட்டான்.

புலனாய்வு அதிகாரியிடம் உஷாராணி கொடுத்த வாக்குமூலத்தில், ‘என்னுடைய கணவன் குடிபோதைக்கு அடிமையானதோடு, பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளார். அவரது கொடுமைகளைத் தாங்க முடியாமல் மகளிர் நீதிமன்றம் மூலம் 2007–ல் நான் விவாகரத்து பெற்றுக்கொண்டேன். பிறகு என்னுடைய உழைப்பில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, குழந்தை களைப் படிக்க வைத்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும், தன் கணவன் தான் செய்யும் தவறுகளை மறைக்க, தன் கற்பின் மீது களங்கம் கற்பிப்பதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் வாக்குமூலத்தில் உஷாராணி தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட விசாரணையை முடித்த புலனாய்வு அதிகாரி, இந்த வழக்கு விசாரணையில் ஏற்பட்ட திடீர் திருப்பங்கள் குறித்த விவரங் களைத் தன்னுடைய உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினார்.

வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்த, அப்போதைய மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க், இந்த வழக்கின் மீது தனிக் கவனம் செலுத்தினார்.

சட்ட வல்லுனர்கள் மற்றும் உயரதிகாரிகளிடம் ஆலோசனை செய்த புலனாய்வு அதிகாரி, உஷாராணியைக் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்காமல், ‘புலன் விசாரணைக்குத் தேவைப்படும் பொழுது ஆஜராக வேண்டும்’ என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

தான் கொடுத்த புகாரின் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், உஷாராணி உள்ளிட்ட 4 பேரையும் சிறைக்கு அனுப்பி வைப்பார்கள் என்ற சமயமுத்துவின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. எனவே, உள்ளூர் காவல்துறை விசாரணையின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, இந்த கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி, காவல்துறை இயக்குனருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை மனுக்களை சமயமுத்து அனுப்பிவைத்தார். மேலும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் ‘ரிட்’ மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

‘ரிட்’ மனு விசாரணையில் இருந்து வந்த நேரத்தில், இந்த வழக்கின் புலன் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த விசாரணையில், வீரணனைக் கொலை செய்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த உஷாராணியின் தந்தை சந்திரன், உஷாராணிக்குப் பழக்கப்பட்டவர் என்று கூறப்பட்ட நாகேஸ்வரன் ஆகிய இருவரும், கொலை நடந்ததாகக் கூறப்பட்ட நேரத்தில் வெவ்வேறு பணிகளில், வெவ்வேறு இடங்களில் இருந்ததற்கான ஆதாரங்கள் புலனாய்வு அதிகாரிக்குக் கிடைத்தது.

உஷாராணியும், அவரது குழந்தைகளும் மதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜராகி, நடந்த சம்பவம் குறித்து ரகசிய வாக்குமூலம் கொடுத்தனர்.

சம்பவத்தன்று வீரணன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி, மகளிடம் முறை தவறி நடக்க முயற்சித்தது பற்றியும், வீரணனின் மிருகத்தனமான செயல்பாட்டில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள, வீட்டிலிருந்த கிரிக்கெட் மட்டையைக் கொண்டு உஷாராணி அவளது கணவனைத் தாக்கியது குறித்தும், மயங்கி விழுந்த வீரணனுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது பற்றியும் அந்த ரகசிய வாக்குமூலத்தில் தாயும், மகள்களும் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர், வழக்கு பற்றி தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘இந்த வழக்கின் புலன் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை. எனக்கு கிடைத்த தகவலின்படி, இறந்து போன வீரணன் சம்பவ நேரத்தில் மது அருந்தியிருக்கவில்லை. இந்தக் கொலை வழக்கில் முறையான புலன் விசாரணை மேற்கொள்ள, வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கலெக்டரின் அந்த கடிதத்தைத் தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின்படி பெற்ற சமயமுத்து, அதை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அத்துடன், ‘இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றாவிட்டாலும், மாவட்ட கலெக்டர் குறிப்பிட்டதுபோல், சி.பி.சி.ஐ.டி.க்காவது மாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார்.

‘புலன் விசாரணையில் இருந்து வரும் எந்த ஒரு குற்ற வழக்கு தொடர்பான அறிக்கையையும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கொடுக்கக்கூடாது. அப்படி இருக்கும் பொழுது, மாவட்ட கலெக்டரின் கடிதம், எப்படி மனுதாரருக்குக் கொடுக்கப்பட்டது?’ என்ற கேள்வியை உயர்நீதிமன்ற எழுப்பியது. இறந்து போன வீரணனின் உடல் உறுப்புகளை ஆய்வு செய்த தடய அறிவியல் ஆய்வுக்கூடம் வழங்கிய அறிக்கையில், மதுவின் அளவு கணிசமாக உடலுறுப்புகளில் இருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. இந்த வழக்கின் புலன் விசாரணை சரியான முறையில் நடைபெற்று வருவதாகக் கருதிய உயர்நீதிமன்றம், சமயமுத்து தாக்கல் செய்த ‘ரிட்’  மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள உள்ள உரிமையை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு–100 விவரிக்கிறது. தற்காப்புக் காக எந்தெந்த சூழ்நிலைகளில் தன்னைத் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிக்கலாம் என்பதையும் இந்தச் சட்டப்பிரிவு விவரிக்கிறது. தன் மீது பாலியல் பலாத்காரம் செய்ய வருபவனுக்கு மரணம் விளைவிக்காவிட்டால், அவன் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து விடுவான் என்று ஒரு பெண் நியாயமாகக் கருதினால், மரணத்தை விளைவிக்கும் உரிமை அவளுக்கு உண்டு.

இந்த சட்டப் பிரிவின்படி, உஷாராணி தன்னுடைய மகள் மீதான பாலியல் பலாத்காரத்தைத் தடுப்பதற்காக நிகழ்த்திய செயலானது, அவளது கணவனை மரணமடையச் செய்ததால், அவளது செயல் இந்திய தண்டனைச் சட்டம் 100–ன்படி ஏற்புடையதாகும் என காவல் துறை முடிவு செய்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. அதனை பரிசீலனை செய்த நீதிமன்றம், காவல்துறையின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு அந்த வழக்கை முடித்து வைத்தது.

குற்ற வழக்குகளில் நடத்தப்படும் புலனாய்வு குறித்து காவல்துறை மீது அவ்வப்போது சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், காவல்துறையின் இதுபோன்ற செயல்பாடு பொதுமக்களின் மனதில் உயர்ந்து நிற்கிறது.

–விசாரணை தொடரும்.


Next Story