முயல் வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது

காட்பாடி வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,
வேலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஸ்சோமன் உத்தரவின்பேரில் வேலூர் வனச்சரகர் குமார், வனவர் அருள்நாதன், வனக்காப்பாளர்கள் கார்த்தி, சிவலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் காட்பாடியை அடுத்த குச்சனூர் காப்புக்காட்டில் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் கையில் துப்பாக்கியுடன் வந்தனர். அவர்கள், வனத்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
இதனையடுத்து வனத்துறையினர் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், ஊசூர் மலையடிவார பகுதியை சேர்ந்த சிவா (வயது 27), பிரபு (20), சரத்குமார் (19) என்பதும், வனப்பகுதியில் காட்டு முயல் மற்றும் கவுதாரியை வேட்டையாடியதும் தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய உரிமம் இல்லாத துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட காட்டு முயல், கவுதாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.






