கதிராமங்கலத்தில் 6–வது நாளாக கடையடைப்பு; பொதுமக்கள் உண்ணாவிரதம்


கதிராமங்கலத்தில் 6–வது நாளாக கடையடைப்பு; பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 7 July 2017 4:30 AM IST (Updated: 6 July 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் 6–வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டத்திலும் ஈடுபட்டனர். குடிநீரில் எண்ணெய் படலம் கலந்து வந்ததால் கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த மாதம் 30–ந்தேதி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே போடப்பட்டு இருந்த முள்செடிகளில் மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறி கடந்த 1–ந்தேதி முதல் கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று 6–வது நாளாக கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் கதிராமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள் என 350–க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள அய்யனார்கோவில் வளாகத்தில் உண்ணாவிரதப்போராட்டத்திலும் ஈடுபட்டனர். கதிராமங்கலத்தில் ஆட்டோக்கள், வாடகை கார்களும் ஓடவில்லை.

இந்த நிலையில் பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு மாணவர்கள் அமைப்பை சேர்ந்த 10–க்கும் மேற்பட்டவர்கள் வந்து போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

கதிராமங்கலம் மணல்மேட்டு தெருவில் நேற்று காலை 6 மணிக்கு ஊராட்சி மூலம் திறந்து விடப்பட்ட தண்ணீரில் எண்ணெய் படலம் நிறைந்து காணப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் கும்பகோணம்–பூம்புகார் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீரில் எண்ணெய் படலம் இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை பார்த்தனர். அங்கு தண்ணீர் சுத்தமாக இருந்தது. இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் உள்ள குழாயை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.


Next Story