கட்டிடம் கட்டுனர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரிக்கை


கட்டிடம் கட்டுனர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரிக்கை
x
தினத்தந்தி 7 July 2017 4:30 AM IST (Updated: 6 July 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி கட்டிடம் கட்டுனர் சங்கத்தினர் நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் மணல் விற்பனையை முறைப்படுத்தவும், மணல் கொள்ளையை தடுக்கவும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு பிறகு மணல் விலை குறைக்கப்பட்டது. குவாரிகளில் தினமும் குறிப்பிட்ட அளவுக்கு தான் மணல் அள்ள வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு           ஏற்பட்டு இருக்கி றது. இதனால் கட்டிட தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான வல்லுனர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை நீக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய கட்டுனர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். ஜஸ்டின்பால், ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்களும் ஆதரவு தெரிவித்து அவற்றின் நிர்வாகிகள், போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


இதுபற்றி அகில இந்திய கட்டுனர் சங்க நிர்வாகிகள் கூறியபோது, ‘மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் நடக்கும் அனைத்து மத்திய, மாநில அரசாங்க ஒப்பந்தப்பணிகள், அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் மற்றும் தனியார் நிறுவனங்களால் கட்டப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் நின்றுவிட்டது. இதனால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே இதுதொடர்பாக அரசு உடனே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்கள்.


Related Tags :
Next Story