வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது கலெக்டர் தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி வளாக தூதுவர் மற்றும் கல்லூரி முதல்வர்கள் மூலம் புதிய வாக்காளர்களை பெயர் சேர்த்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கல்லூரிகளில் முதலாமாண்டு படித்துவரும் 18 வயது பூர்த்தி அடைந்த மாணவ–மாணவிகளை வாக்காளராக சேர்த்திடும் பணி நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 18–19 வயதை சேர்ந்தவர்கள் 34 ஆயிரத்து 696 நபர்கள் உள்ளனர். அவர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பணியினை கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களில் ஒருவரை கல்லூரி வளாக தூதுவராக நியமிக்கப்பட்டு அதன் மூலம் புதிய மாணவர்களின் வருகை குறித்து கணக்கெடுத்து புதிய வாக்காளர் சேர்க்கைக்காக இணையதளம் மூலம் பதிவு செய்து புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்று வழங்குவதே கல்லூரி வளாக தூதுவரின் முக்கிய பணியாகும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான பணிகள் கடந்த 1–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை வரை நடைபெற்று வருகிறது. வருகிற 9, 23–ந் தேதி ஆகிய நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. கல்லூரிகளுக்காக வருகிற 12, 19–ந் தேதி ஆகிய நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களை பயன்படுத்தி கல்லூரிகள் அளவிலான கல்லூரி வளாக தூதுவர்கள் இப்பணிகளை மேற்கொள்ளும்போது திட்டமிட்டு செயல்பட்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள் ஒருவர்கூட விடுபடாமல் எல்லோரும் வாக்காளராக உள்ளார்கள் என்ற நிலையை உறுதிபடுத்துவதே உங்களது பணியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், குளித்தலை கோட்டாட்சியர் விமல்ராஜ், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் துரைசாமி, வட்டாட்சியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.