கட்சி சார்பில் பல்வேறு மாநாடுகளை நடத்த முடிவு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நடந்தது


கட்சி சார்பில் பல்வேறு மாநாடுகளை நடத்த முடிவு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நடந்தது
x
தினத்தந்தி 7 July 2017 2:00 AM IST (Updated: 7 July 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி சார்பில் பல்வேறு மாநாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

திறமையான வேட்பாளர்கள்

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவில் நேற்று ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மூத்த தலைவர்கள் பசவராஜ் ஹொரட்டி, எச்.விஸ்வநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அக்கட்சி சார்பில் பல்வேறு மாநாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு தேவேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆபரே‌ஷன் கமலாவால் எங்களுக்கு அனுபவம் உள்ளது. அதனால் வேட்பாளர்களின் பட்டியலை நிதானமாக வெளியிடுமாறு அறிவுறுத்தி உள்ளேன். முன்பு எங்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 7, 8 வேட்பாளர்கள் மாற்று கட்சிகளுக்கு சென்றனர். இதனால் வேட்பாளர்கள் பட்டியலை முன்கூட்டியே வெளியிடுவது வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறேன். எங்களிடம் திறமையான வேட்பாளர்கள் உள்ளனர். ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் எங்களுக்கு வேட்பாளர்கள் உள்ளனர்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

புதிய நிர்வாகிகள் நியமனம்

அதைத்தொடர்ந்து குமாரசாமி கூறியதாவது:–

கட்சியை பலப்படுத்தும் விதமாக தேவேகவுடா அறிவுறுத்தலின் பேரில் இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் கூட்டப்பட்டது. எங்கள் கட்சியின் சுரேஷ்பாபு எம்.எல்.ஏ. தலைமையிலான பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர் மாவட்ட, தாலுகா அளவில் நிர்வாகிகள் நியமனம் குறித்து ஒரு அறிக்கையை வழங்கியுள்ளார். இதுபற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கட்சிக்கு மாநில அளவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மண்டலம் வாரியாகவும், சாதிகள் வாரியாகவும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் மாநாடு, விவசாயிகள் மாநாடு, ஆதிதிராவிடர்கள்–பழங்குடியினர் மாநாடு, மகளிர் மாநாடு, சிறுபான்மையினர் மாநாடு, இளைஞர்கள் மாநாடுகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பது...

கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள எச்.விஸ்வநாத்துக்கு உள்ள அபாரமான அனுபவத்தை பயன்படுத்த, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் அணியின் பொறுப்பை வழங்க முடிவு செய்துள்ளோம். மைசூருவில் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு எச்.விஸ்வநாத்தின் தலைமையில் நடத்தப்படும். தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். எங்கள் கட்சி சார்பில் நடைபயணம் தொடங்க முடிவு செய்துள்ளோம். தட்சிண கன்னட மாவட்டத்தில் அமைதியை குலைக்கும் முயற்சி நடக்கிறது. அடுத்த வாரம் இந்த நடைபயணம் தொடங்கப்படும்.

சன்னபட்டணாவில் எனது மனைவி அனிதா குமாரசாமி போட்டியிடுமாறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தில் இருந்து 2 பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவில் இப்போதும் நான் உறுதியாக உள்ளேன். இதுபற்றி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story