சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக ரோஷன் பெய்க் நியமனம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என பேட்டி


சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக ரோஷன் பெய்க் நியமனம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என பேட்டி
x
தினத்தந்தி 7 July 2017 2:00 AM IST (Updated: 7 July 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக ரோஷன் பெய்க் நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கமகளூரு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக ரோஷன் பெய்க் நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கமகளூரு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரி

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதல்-மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் உள்ள மந்திரிகள் ஒவ்வொரு மாவட்டத்தின் பொறுப்பு மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மந்திரியாக இருந்த அபயசந்திர ஜெயின், சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சமீபத்தில் மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டபோது அபயசந்திர ஜெயின் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரி பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில் போலீஸ் மந்திரியாக பதவி ஏற்ற பரமேஸ்வர், சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு (2018) நடக்க உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு, மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து கட்சியை பலப்படுத்துமாறு காங்கிரஸ் கட்சி மேலிடம் பரமேஸ்வருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக மாநில நகர வளர்ச்சி துறை மந்திரி ரோஷன் பெய்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள ரோஷன் பெய்க் நேற்று சிக்கமகளூருவுக்கு வந்தார். சிக்கமகளூரு விருந்தினர் மாளிகைக்கு வந்திறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் சத்தியவதி, போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அவர், சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்டத்தின் பிரச்சினைகளை முழுமையாக தெரிந்துகொண்டு, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்‘ என்றார்.

பதவி தப்புமா?

சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக பதவி ஏற்றவர்களிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டு வருகிறது. இதனால், தற்போது பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள மந்திரி ரோஷன் பெய்க்கின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரிகளாக இருந்த அபயசந்திர ஜெயின், பரமேஸ்வர் ஆகியோரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story