நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 10 பேர் கைது தயாரித்து விற்ற வாலிபரும் சிக்கினார்


நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 10 பேர் கைது தயாரித்து விற்ற வாலிபரும் சிக்கினார்
x
தினத்தந்தி 7 July 2017 4:45 AM IST (Updated: 7 July 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சப்பள்ளி அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 10 பேர் மற்றும் துப்பாக்கி தயாரித்து விற்ற வாலிபர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்துள்ளதாகவும், இரவு நேரங்களில் வனப்பகுதிகளில் வன விலங்குகளான காட்டுப்பன்றி, மான், முயல் உள்ளிட்ட வன வனவிலங்குகளை வேட்டையாடுவதாகவும் கிராம நிர்வாக அலுவலர் வீமனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் பஞ்சப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் தலைமையில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள ஜிஞ்சேபள்ளியை சேர்ந்த பாப்பாச்சாரியின் மகன் தாசன் (வயது35) என்பவர் நாட்டுத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்று தாசனை கைது செய்தனர். அங்கு நாட்டுத்துப்பாக்கி தயாரிக்க பயன்படும் மரக்கட்டைகள் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் தாசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

10 பேர் கைது

அப்போது பஞ்சப்பள்ளி அருகே உள்ள நம்மாண்டஅள்ளியை சேர்ந்த மகாலிங்கம்(45), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த செங்கோடன் (56), மயில்சாமி (31), தங்கவேல் (50), கொக்கிக்கல் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (45), கரகூரை சேர்ந்த கணேசன் (40), புட்டன் (30), அகரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (40), ராமச்சந்திரன் (29), ராஜா (29) ஆகிய 10 பேருக்கும் நாட்டுத்துப்பாக்கியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்து கைது செய்யப்பட்ட 10 பேரும் விவசாயிகள் என்றும், இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததும், இவற்றை விரட்ட நாட்டுத்துப்பாக்கி வாங்கி வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது. தாசன் நாட்டுத்துப்பாக்கிகளை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் யாருக்கெல்லாம் விற்பனை செய்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டுத்துப்பாக்கி தயாரித்து விற்ற வாலிபர் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த 10 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story