மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி


மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 7 July 2017 4:30 AM IST (Updated: 7 July 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பள்ளிசந்தம் கிராமத்தில் களப்பால்-மன்னார்குடி சாலை அருகே புதிய மதுக்கடை கடந்த மாதம்(ஜூன்) 30-ந் தேதி திறக்கப்பட்டது. இதை அறிந்த திருக்களார், காடுவாகுடி, பள்ளிசந்தம், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் மற்றும் கிராம மக்கள், மதுக்கடையை மூடக்கோரி கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த மதுக்கடை 3 நாட்களாக திறக்கப்படவில்லை. போராட்டத்தின்போது இந்த மதுக்கடையை மூடக்கோரியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் (திருத்துறைப்பூண்டி), பாலஞானவேல் (கோட்டூர்) ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் திருப்பத்தூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் சூப்பிரண்டு (குற்றப்பிரிவு) நடராஜன், கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுவது என்றும், அதுவரை மதுக்கடை திறக்கப்படாது என போலீசார் உறுதியளித்தனர். அதன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story