மராட்டியத்தில் 2008–ம் ஆண்டுக்கு பிறகு கடன் வாங்கியவர்களுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு


மராட்டியத்தில் 2008–ம் ஆண்டுக்கு பிறகு கடன் வாங்கியவர்களுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 July 2017 4:00 AM IST (Updated: 7 July 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 2008–ம் ஆண்டு மார்ச் 1–ந் தேதிக்கு பின்னர் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கும், கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மும்பை,

மராட்டியத்தில் 2008–ம் ஆண்டு மார்ச் 1–ந் தேதிக்கு பின்னர் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கும், கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி

மராட்டியத்தில் ரூ.34 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார். ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ் சன்மன் யோஜனா’ என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தின்கீழ், கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் 2016–ம் ஆண்டு ஜூன் 30–ந் தேதி வரை விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், 2012–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதிக்கு முன்னர், பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடி வரையறைக்குள் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.

தேவேந்திர பட்னாவிசுடன் சந்திப்பு

இது தொடர்பாக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனில் போன்டே, ஆசிஷ் தேஷ்முக், சஞ்சய் குட்டே மற்றும் பிரசாந்த் பாம்ப் ஆகியோர் மும்பையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து, கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில், கடந்த 2008–ம் ஆண்டு பிப்ரவரி 29–ந் தேதி வரையில், நாடு முழுவதும் ரூ.71 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டினர்.

ஒப்புதல்

இதனை பரிசீலித்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், 2008–ம் ஆண்டு மார்ச் 1–ந் தேதி முதல் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய ஒப்புதல் தெரிவித்தார். அத்துடன் இதுபற்றி நேற்று முன்தினம் இரவு அவர் பங்கேற்ற வழக்கமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘மே முக்யமந்திரி போல்தாயே’ (நான் முதல்–மந்திரி பேசுகிறேன்) நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும், 2016–17–ம் ஆண்டில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் மீது செலுத்த வேண்டிய தவணை தொகை தேதியை ஜூன் 30–ந் தேதியில் இருந்து வருகிற 31–ந் தேதி வரை நீட்டித்தார்.

கமிட்டி கலைப்பு

இதனிடையே, பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி ஆய்வு செய்வதற்காக வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி கலைக்கப்பட்டது. அத்துடன், பயிர்க்கடன் தள்ளுபடியை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டுறவுத்துறை மந்திரி சுபாஷ் தேஷ்முக் தலைமையில் மற்றொரு கமிட்டி அமைக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

1 More update

Next Story