திருப்பூர் மாநகரில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை சி-படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
திருப்பூர் மாநகரில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை சி-படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் நாகராஜன் அறிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிநபர் வீடுகள் மற்றும் விடுதிகள், தங்கும் விடுதிகள், சொகுசு விடுதிகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் வெளிநாட்டினரை தங்க வைப்பதற்கு, பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், விடுதி காப்பாளர்கள் வெளிநாட்டினரின் விவரங்களை சி-படிவத்தில் பூர்த்தி செய்து 24 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு இணையதளம் மூலமாக தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி-படிவத்தை www.boi.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் ஊரக போலீசார் ரோந்துப்பணியின் போது வங்காளதேசத்தை சேர்ந்த 4 பேரை பிடித்தனர். அவர்களில் 2 பேர் சுற்றுலா விசாவிலும், 2 பேர் எந்தவித ஆவணங்கள் இன்றியும் இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூரில் வாடகைக்கு ஒரு வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரியவந்தது. 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரோ அல்லது பணியமர்த்தப்பட்டுள்ள நிறுவன உரிமையாளரோ காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை.
சி-படிவம்
இனிவரும் காலங்களில் இது தொடர்பான சம்பவங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து வெளிநாட்டினர் பற்றிய விவரங்கள் அனைத்தும் தெரிந்த பின்னர் தங்குவதற்கு இடமோ அல்லது நிறுவனங்களில் பணிபுரிய அனுமதியோ வழங்க வேண்டும். திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தால் சி-படிவம் அனுமதி வழங்கப்பட்டுள்ள தனியார் விடுதிகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர் வீடுகள் அனைவரும் வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை இணையதளம் மூலம் அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு தெரிவித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story