குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள தனிநபர் இணைப்புகள் துண்டிப்பு

வேங்கிகால் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது.
திருவண்ணாமலை,
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள தனிநபர் இணைப்புகளை தற்காலிகமாக துண்டிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகநாயகி கூறினார்.
வேங்கிகால் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் வேங்கிகால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்காக நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி தலைமையிலான அதிகாரிகள் வேங்கிகால் ஊராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர், இடுக்கு பிள்ளையார் கோவில் தெரு, குபேர நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 14 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி நிருபர்களிடம் கூறியதாவது:–
வேங்கிகால் ஊராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் சீராக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள தனிநபர் இணைப்புகளை தற்காலிகமாக துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தனிநபர் இணைப்பின் மூலம் சிலர் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதால், கடைசியில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அருகே பொது குழாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






