காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசம்


காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான  வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசம்
x
தினத்தந்தி 8 July 2017 3:00 AM IST (Updated: 7 July 2017 8:41 PM IST)
t-max-icont-min-icon

காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறினார்.

திருவண்ணாமலை,

காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் தடுப்பு பணிகளுக்கான மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு மற்றும் திறனாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். இதில் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:–

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் சுய மருத்துவம் மற்றும் மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளுதலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் முறைப்படி சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

காய்ச்சல் தொடர்ந்து இருப்பின் அரசு மருத்துவமனை ஆய்வகங்களில் ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான முறையான சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து 7 நாட்கள் வரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவரிடம் முறையான உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story