கதிராமங்கலம் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்


கதிராமங்கலம் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்
x
தினத்தந்தி 8 July 2017 4:15 AM IST (Updated: 7 July 2017 10:10 PM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலம் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என வெள்ளையன் கூறினார்.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த மாதம் 30–ந்தேதி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே போடப்பட்டு இருந்த முட்செடிகளில் மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறி கடந்த 1–ந்தேதி முதல் கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கதிராமங்கலத்தில் இருந்து போலீசாரை வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 3–ந்தேதி, போலீசார் வெளியேற்றப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று 7–வது நாளாக கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் நேற்று கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களை அய்யனார்கோவில் வளாகத்தில் சந்தித்து பேசினார். அப்போது சங்க தலைவர் இளங்கோவன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் திருஞானம் உள்பட சங்க நிர்வாகிகள் கதிராமங்கலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கினர்.

பின்னர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கதிராமங்கலம் மக்களின் கோரிக்கைகள் நியாயமானது. வணிகர்கள் தொடர்ந்து ஒரு வார காலமாக கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கதிராமங்கலம் மக்களுக்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அளவில் கடையடைப்பு போராட்டம் விரைவில் நடத்தப்படும். அன்றையதினம் மற்ற மாவட்டங்களின் தலைநகரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கான அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. அப்போது போராட்ட தேதி அறிவிக்கப்படும். அதுவரை கதிராமங்கலம் வணிகர்களின் கடையடைப்பு தொடரும். வணிகர்கள் இந்த கடையடைப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்களும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கமுடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. இருப்பினும் மக்களின் போராட்டத்திற்காக வணிகர்கள் தொடர்ந்து கடையடைப்பு செய்திருப்பது பாராட்டுக்குரியது. கதிராமங்கலம் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாமல், அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் மாநில அளவில் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story