மதுக்கடையை மூடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அத்தனூரில் மதுக்கடையை மூடக் கோரி விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் பேரூராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. மாநில நெடுஞ்சாலை அருகேயுள்ள இந்த மதுக்கடையால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே இந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அத்தனூர் பஸ்நிறுத்தம் அருகே விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்கு அத்தனூர் பேரூர் செயலாளர் ராம்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட பொருளாளர் அரசன் மற்றும் கபிலன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரியும், அனுமதியின்றி சந்துகடைகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.